NATIONAL

டீசல் ரொக்க உதவித் தொகை- 100,000 விண்ணப்பங்கள் அங்கீகரிப்பு

கோலாலம்பூர், ஜூன் 20- சொந்தமாக டீசல் வாகனம் வைத்திருப்போருக்கான பூடி இண்டிவிடு, விவசாயிகள் மற்றும் சிறுதோட்டக்காரர்களுக்கான பூடி அக்ரி-கொமுடிட்டி திட்டங்களை உள்ளடக்கிய பூடி மடாணி முன்னெடுப்பின் கீழ் டீசல் ரொக்க உதவித்
தொகைக்கு நேற்று வரை 100,000 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தகுதி உள்ளத் துறைகளுக்கும் சமூகத்தில் உதவித் தேவைப்படுவோருக்கும் உதவும் நோக்கில் டீசலுக்கான இலக்கு மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா கூறினார்.

டீசல் வாகனங்களை வைத்திருக்கும் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தனி
நபர்களின் கூடுதல் செலவினத்தைக் சமாளிப்பதற்கு இந்த 200 வெள்ளி
உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

ஜூன் மாதத்திற்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு விரைந்து
விண்ணப்பம் செய்யும்படி தகுதி உள்ள மலேசியர்களை நாங்கள் கேட்டுக்
கொள்கிறோம். விண்ணப்பம் செய்த மாதம் தொடங்கி இந்த பூடி மடாணி
ரொக்க உதவித் தொகையை விநியோகிக்க அரசாங்கம் கடப்பாடு
கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 10ஆம் தேதி வரை 30,000 விண்ணப்பதாரர்கள் ரொக்க உதவித்
தொகையைப் பெற்றுள்ளனர். நேற்று மேலும் 46,000 பேருக்கு இந்த
உதவித்தொகை வழங்கப்பட்டது. இம்மாத இறுதிக்குள் விண்ணப்பம்
செய்வோருக்கு வரும் ஜூலை மாதம் தொடக்கத்தில் நிதி
பகிர்ந்தளிக்கப்படும் என்றார் அவர்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 200 வெள்ளி மாதாந்திர உதவித்
தொகையை தங்கள் வங்கிக் கணக்கு வாயிலாகவும் அல்லது பேங்க்
சிம்பானான் நேஷனல் முகப்பிடங்களிலும் ரொக்கமாகவும் பெற்றுக்
கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :