ANTARABANGSA

இஸ்ரேலிய படைகள் ராஃபாவின் உட்புறத்தை ஊடுருவின- பாதுகாப்பான இடம் தேடி மக்கள் ஓட்டம்

கெய்ரோ, ஜூன் 20 – காஸாவின் கிழக்கு பகுதி நகரான ராஃபாவின் உட்புறம்
நோக்கி போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் ஆதரவுடன் இஸ்ரேலிய
டாங்குகள் ஊடுருவி வருகின்றன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில்
எட்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகப் பொது மக்களும் மருத்துவ
துறையினரும் கூறினர்.

நேற்று நள்ளிரவில் ஐந்து குடியிருப்பு பகுதிகள் நோக்கில் டாங்குகள்
நகர்ந்தன. புகலிடம் நாடிய மக்கள் வசிக்கும் கூடாரங்களை எறிபடைகளும்
துப்பாக்கி குண்டுகளும் தாக்கின என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த எட்டு மாதங்களாக நிகழ்ந்து வரும் போர் முடிவுக்கு வருவதற்கான
எந்த அறிகுறியும் தென்படாத நிலையில் இஸ்ரேலையும் ஹமாஸ்
இயக்கத்தையும் போர் நிறுத்தத்திற்கு இணங்க வைப்பதில் அமெரிக்கா
தலைமையிலான அனைத்துலக சமரசப் பேச்சாளர்கள் மேற்கொண்ட
முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

தென் காஸாவில் பொது மக்கள் மற்றும் வணிகர்கள் மீது இஸ்ரேல்
நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ
வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறின.

கரீம் சலோம் எல்லை வழியாக வரும் உதவிப் பொருள்கள் ஏற்றிய
டிரக்குகளுக்காக காத்திருந்த பொது மக்கள் மீது இந்த தாக்குதல்
நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

காஸா பகுதியில் அதிக நாட்களைச் செலவிட்டு பெரும்பாலான
பாலஸ்தீனப் பகுதிகளை கைப்பற்றிய போதிலும் ஹமாஸ் இயக்கத்தை
முற்றாக துடைத்தொழிப்பது மற்றும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை
விடுப்பது ஆகிய நோக்கங்களை அதனால் இன்னும்
அடைய முடியவில்லை.


Pengarang :