NATIONAL

பள்ளி வேன் மோதியதில் பாலர் பள்ளி மாணவர் மரணம்

ஜோகூர் பாரு, ஜூன் 20: ஜாலான் சூரியா, பண்டார் ஶ்ரீ ஆலம் என்ற இடத்தில் பாலர் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி வேன் மோதியதில் இறந்தார்.

ஐந்து வயது சிறுமி சம்பந்தப்பட்ட இச்சம்பவம் காலை 11.35 மணியளவில் நடந்ததாக ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட பெண் வேன் ஓட்டுநர் அச் சிறுமியையும் அவரது ஆறு வயது சகோதரனையும் அவர்களின் வீட்டின் முன் இறக்கிவிட்டு சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

“அச்சிறுமியின் சகோதரர் வேனின் பின்புறம் நடந்து செல்வதைக் கண்ட ஓட்டுனர் அச்சிறுமியும் உடன் சென்றிருப்பார் என நினைத்தார்.

“திடீரென வேனின் முன்னால் சென்ற அச்சிறுமியை தன்னையறியாமல் ஓட்டுனர் மோதியுள்ளார். பின்னர் அவர் கீழே இறங்கி அச்சிறுமியின் நிலையைப் பார்த்து தாயாருக்கு உடனடியாகத் தெரிவித்துள்ளார்” என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

பலத்த காயமடைந்த சிறுமியை அவரது தாயார் மசாய் சுகாதார கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றதாகவும், மருத்துவ அதிகாரி அச்சிறுமி இறந்துவிட்டதாக உறுதிப் படுத்தியதாகவும் இஷாக் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரணைக்காக ஒட்டுனர் இப்போது தடுத்து வைக்கப் பட்டுள்ளார் என்று முகமட் சொஹைமி கூறினார்.

– பெர்னாமா


Pengarang :