SELANGOR

எம்.பி.பி.ஜே. ஏற்பாட்டிலான மறுசுழற்சித் திட்டத்தின் கீழ் 41 லட்சம் கிலோ பொருள்கள் சேகரிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21- குப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும்
பொருள்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் பிஜே
இகோ ரிசைக்கிளிங் பிளாஸா திட்டத்தின் கீழ் கடந்த 2021 முதல் 2023
வரை 41 லட்சத்து 76 ஆயிரத்து 838 கிலோ மறுசுழற்சிப் பொருள்களை
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.பி.ஜே.) சேகரித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் 16 லட்சத்து 74 ஆயிரத்து 611 கிலோ
மறுசுழற்சிப் பொருள்களும், 2022ஆம் ஆண்டு 15 லட்சத்து 79 ஆயிரத்து 217
கிலோ பொருள்களும் 2021ஆம் ஆண்டு 923,010 கிலோ பொருள்களும்
சேகரிக்கப்பட்டதாக எம்.பி.பி.ஜே. திடக்கழிவு மேலாண்மை துறையின்
இயக்குநர் ஜைய்ன் அஸ்லி அப்துல் ரஹ்மான் கூறினார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் மிக அதிகமாக அதாவது 651,156 கிலோ கார்பன்
அட்டைகள் சேகரிக்கப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் 365,726
கிலோ பிளாஸ்டிக் பொருள்களும் 182,823 கிலோ போத்தல்களும்
சேகரிக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

சேகரிக்கப்பட்ட மறுசுழற்சிப் பொருள்களில் 105,992 கிலோ உலோக
டின்கள், 34,996 கிலோ அலுமினியம், 16,177 கிலோ பான டின்கள், 7,130
கிலோ மின்னியல் பொருள்களும் அடங்கும் என்றார் அவர்.

காகாசான் ரும்புன் சிலாங்கூர்த திட்டத்தை முன்னிட்டு சிலாங்கூர் ராஜா
மூடா தெங்கு அமீர் ஷா தலைமையில் நேற்று இங்கு நடத்தப்பட்ட
நிகழ்வொன்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

இந்த பிளாஸா கட்டிடத்தில் மறுசுழற்சிப் பொருள்களை சேகரிப்பது
தவிர்த்து மறு சுழற்சி பட்டறை, 3ஆர் கண்காட்சிக் கூடம், கருத்தரங்கு
அறை, சிறார்களுக்கான நடவடிக்கை மையம் உள்ளிட்ட வசதிகளும்
உள்ளன என்று அவர் சொன்னார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த மறுசுழற்சி
பிளாஸாவுக்கு இவ்வாண்டு இதுவரை 6,379 பேர் வருகை தந்துள்ள
வேளையில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 10,630 பேராக இருந்தது
என்றார் அவர்.


Pengarang :