NATIONAL

டீசல் விலை மறுசீரமைப்பினால் தாய். எல்லையிலுள்ள  எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு பேரிடி

பாசிர் மாஸ், ஜூன் 21 – இம்மாதம் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட டீசல் மானிய மறுசீரமைப்பு காரணமாக  மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கும் ரந்தாவ் பாஞ்சாங் நகரிலுள்ள  பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த எல்லை நகரத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எதுவும் காணப்படவில்லை என்பது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

எரி பொருளுக்காக தாய்லாந்து வாகனங்களுடன் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாதது உள்ளூர் மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

முன்பு, பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும் மானிய விலை டீசலை வாங்குவதற்காக  பல தாய்லாந்து வாகனங்கள் ரந்தாவ் பாஞ்சாங்கில் பெரும் எண்ணிக்கையில் குவிந்தன.

ஜூன் 10 முதல் தீபகற்ப மலேசியாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் டீசல் லிட்டருக்கு வெ.3.35 என்ற மானியம் இல்லாத விலையில் விற்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.

டீசல் கடத்தல் நடவடிக்கைகளுக்கு  நான்கு சக்கர இயக்க வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு சொந்தமான லோரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கவலையும் இருந்தது.

எரிபொருள் கசிவைத் தடுக்க உதவும் அரசாங்கத்தின் இந்த  நடவடிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது என்று உள்ளூர்வாசி வான் அன்னுார் வான் இஸ்மாயில் (வயது 52) கூறினார்.

டீசலை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதன் மூலம் கடத்தல்காரர்கள் இன்னும்  ஒரு லிட்டருக்கு 89 சென் லாபம் ஈட்ட முடியும் என்று அவர் கூறினார்.

மலேசிய டீசலை வாங்குவது இனி பயனில்லை என்பதால் தாய்லாந்து வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்று குவால் திங்கியிலுள்ள பெட்ரோல் நிலைய நடத்துநரான ஜரித் முகமது பக்ரி தெரிவித்தார்.


Pengarang :