NATIONAL

மனிதக் கடத்தலில் தொடர்புடைய 113 சந்தேக நபர்கள் கைது

கோலாலம்பூர், ஜூன் 21- “ஓப்ஸ் மெகா பிந்தாஸ்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட 33 சோதனைகளில் மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 113 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 25 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 22 சிறார்கள் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (உளவுத்துறை/நடவடிக்கை) துணை இயக்குநர் டிசிபி ஃபாடில் மார்சஸ் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வங்காளதேசம், கம்போடியா, மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

பாலியல் மற்றும் கட்டாய உழைப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 38 மற்றும் 44 வயதுக்குட்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களை உள்ளடக்கிய மூன்று மாற்றுத் திறனாளிகளையும் போலீசார் மீட்டனர்.

இக்கைது தொடர்பில் 2007ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் 55பி பிரிவு, 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவு, 1963ஆம் ஆண்டு குடிநுழைவு ஒழுங்குமுறை விதிகளின் 39(பி) பிரிவு 12 மற்றும் 14வது பிரிவின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என அவர் சொன்னார்.

மனித கடத்தல் நடவடிக்கைகளை போலீசார் கடுமையாகக் கருதுவதாகவும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் அல்லது குற்றக் கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பை காவல்துறை பெரிதும் வரவேற்கிறது. மனித கடத்தல் நடவடிக்கைகள் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.


Pengarang :