NATIONAL

40 ஆண்டுகளாக வரி உயர்வு இல்லை- செலவின அதிகரிப்பால் சிரமத்தை எதிர்நோக்கும் ஊராட்சி மன்றங்கள்

ஷா ஆலம், ஜூன் 21- வளர்ச்சியடைந்த மாநிலமாக விளங்கி வரும்
சிலாங்கூரில் சொத்துகளின் மதிப்பும் தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது.
குடியிருப்பாளர்களுக்கு குறிப்பாகப் பொது மற்றும் அடிப்படை வசதிகளை
மேம்படுத்தும் விஷயத்தில் ஊராட்சி மன்றங்களின் பணியும் அதிகரித்து
வருகிறது.

இந்த நோக்கத்திற்காக மதிப்பீட்டு வரியும் உயர்த்தப்படுவது
அவசியமாகிறது. இந்த வரி பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை
என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மாநிலத்திலுள் அனைத்து 12 ஊராட்சி
மன்றங்களும் 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு
செய்யவில்லை.

இத்தகைய சூழ்நிலையிலும் ஊராட்சி மன்றங்கள் சிறப்பான சேவையை
தொடர்ந்து வழங்கி வருகின்றன. மாநிலத்திலுள்ள அனைத்து 12 ஊராட்சி
மன்றங்களுக்கும் சிறப்பான சேவைக்கான அங்கீகாரத்தை வீடமைப்பு
மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு வழங்கியுள்ளது.

அமைச்சின் நட்சத்திர அஸ்தஸ்து முறையின் கீழ் (எஸ்.பி.பி.) பெட்டாலிங்
ஜெயா மாநகர் மன்றம் மிக உயர்ந்த அளவில் அதாவது 97.6
விழுக்காட்டையும் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் மிகக் குறைவாக
அதாவது 91.61 விழுக்காட்டையும் பெற்றுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு 10 ஊராட்சி மன்றங்கள் மட்டுமே ஐந்து நட்சத்திர
அந்தஸ்தைப் பெற்றதுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பான அடைவு
நிலையாக விளங்குகிறது.

காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985) மதிப்பீட்டு வரியை
உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக் கழகம் 37
ஆண்டுகளாகவும் (1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32
ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே
ஆகிய இடங்களுக்கான மதிப்பீட்டு வரியை கடந்த 1992ஆம் ஆண்டு முதல்
அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும்
செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக
வரி உயர்வை அமைல்படுத்தவில்லை.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங்
ஜெயா நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர்
மன்றம் 18 ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை.

இருப்பினும், சொத்து உரிமையாளர்கள் இந்த புதிய மதிப்பீட்டு வரிக்கு
தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி
மன்றங்களிடம் பொது மக்கள் தங்கள் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம்.

ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான தேதியை சம்பந்தப்பட்ட ஊராட்சி
மன்றங்களின் அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ள இயலும்
என்பதோடு சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும்
அதற்கான தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரத் திட்டமிடலை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு இந்த
மதிப்பீட்டு வரி மறு ஆய்வு மிக முக்கியம் என்று மந்திரி பெசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே 30ஆம் தேதி கூறியிருந்தார்.

1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்ய முடியும். எனினும்,
மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களும் 20 முதல் 40 ஆண்டுகளாக
மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.


Pengarang :