NATIONAL

ஐந்து வயதுச் சிறுமியை கொலை செய்ததாகக் குடும்ப மாது மீது குற்றச்சாட்டு

ஈப்போ, ஜூன் 21-  இங்குள்ள தாமான் மால்கோப்பில் உள்ள வீடு ஒன்றில் ஐந்து வயது சிறுமியை படுகொலை செய்ததாகக் குடும்ப மாது ஒருவர் மீது   இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று  குற்றஞ்சாட்டப் பட்டது.

மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட  போது  குற்றச்சாட்டை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக வான் பாத்திமா சஹ்ரா வான் அப்துல்லா (வயது 27) என்ற அம்மாது தலையை அசைத்தார். கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடம்  எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூன் 5 முதல் 10 வரை இமான் அடேலியா யூசுல்லா என்ற அந்தச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக அந்த இல்லத்தரசி மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது  30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12  பிரம்படி  வழங்க வகை செய்யும்  குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
ரசாயன அறிக்கையைப் பெறுவதற்கு ஏதுவாக வழக்கை எதிர்வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இங்குள்ள தாமான் மால்கோப்பில் துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து வயது சிறுமி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக  ஊடகங்கள் கடந்த ஜூன் 11ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :