NATIONAL

ஊராட்சி மன்றங்களின் சிறப்பான சேவைக்கு மதிப்பீட்டு வரியின் உயர்வு அவசியமாகும்

ஷா ஆலம், ஜூன் 21: வளர்ச்சி அடைந்த மாநிலமாக விளங்கி வரும் சிலாங்கூரில் சொத்துகளின் மதிப்பும் தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. மாநில குடியிருப்பாளர்களுக்கு குறிப்பாகப் பொது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதில் ஊராட்சி மன்றங்களின் பணியும் அதிகரித்து வருகிறது.

இந்த குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக மதிப்பீட்டு வரி உயர்த்தப்படுவது மிகவும் அவசியமாகும். மேலும், மாநிலத்தில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களும் 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூரில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களிலும் மதிப்பீட்டு வரி உயர்த்தப்பட்டாலும் குறைந்த மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கும் மற்றும் கிராமப்புற வீடுகளுக்கும் விதி விலக்கு வழங்கப்படும். இதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவது மட்டும் இல்லாமல், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் மற்றும் இலாப நோக்கம் அற்ற பொது இடங்களுக்கும் மதிப்பீட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மதிப்பீட்டு வரியின் உயர்வு மக்களின் நன்மையை மையமாகக் கொண்டு உயர்த்தப்படுவதால் இந்த முடிவு சரியானது மற்றும் மக்களுக்கு சுமையாக மாறாமல் இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், வழிப்பாட்டு தளங்கள் போன்றவற்றிற்கு விதி விலக்கு அளித்தது பாராட்டுக்குரியது எனவும் மத குருக்கள் கூறினர்.

 மதிப்பீட்டு வரியின் விகிதம் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் மாறுபடும், காரணம் சொத்தின் மதிப்பு மற்றும் வாடகையைப் பொறுத்து மதிப்பீட்டு வரி வசூலிக்கப்படும். உதாரணமாக வளர்ச்சி அடைந்து வரும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா மற்றும் ஷா ஆலம் போன்ற ஊராட்சி மன்றங்களில் வசூலிக்கப்படும் மதிப்பீட்டு வரி நிச்சயமாக உலு சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கும்.

மேலும், சொத்தின் வகைகள் குறிப்பாகக் குடியிருப்பு மற்றும் வணிகம் ஆகியவைக்கு ஏற்றவாறு மதிப்பீட்டு வரியின் விகிதம் மாறுபடும். உள்ளாட்சி சட்டம் 1976 பிரிவு 127 இன் கீழ் மதிப்பீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. மாநில அரசின் ஒப்புதலுடன் ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு அல்லது அதற்கு மேல் இந்த வரி மறு ஆய்வு செய்யப்படலாம்.

எனவே, ஊராட்சி மன்றங்கள் சிறப்பான சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு மதிப்பீட்டு வரியின் உயர்வு அவசியமாகும் என்பதில் ஐயமில்லை. இந்த வரி உயர்வு குறித்து இதுவரை பொதுமக்கள் எதிர்மறை மற்றும் நேர்மறை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும். சொத்து உரிமையாளர்கள் இந்த புதிய மதிப்பீட்டு வரிக்கு தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான தேதியை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ள இயலும் மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் அதற்கான தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :