NATIONAL

சலவை நிலையத்திலிருந்து 28  திரவமய எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

ஜோகூர் பாரு, ஜூன் 21- அனுமதியின்றி  கட்டுப்படுத்தப்பட்ட அட்டவணைப் பொருளான திரவமய பெட்ரோலிய எரிவாயுவை  சேமித்து வைத்திருந்த  சந்தேகத்தின் பேரில் கடந்த செவ்வாய்கிழமை இங்குள்ள தாமான் எகோபெர்னியாகானில் உள்ள சலவை நிலையத்தில் சோதனை மேற்கொண்ட உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (கேபிடிஎன்) அமலாக்க அதிகாரிகள் அங்கிருந்து  28 எரிவாயு சிலிண்டர்களைப் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததையடுத்து நேற்று  மதியம் 12.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மூலம் அந்த எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன என்று  உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஜோகூர் மாநில இயக்குனர் லிலிஸ் சஸ்லிண்டா பொரானோமோ கூறினார்.

அங்கு அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது அந்த  கட்டுப்படுத்தப்பட்டப் பொருளைச் சேமித்து வைப்பதற்கான அனுமதியை  அந்த சலவை நிலையம் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாக அவர் சொன்னார்

அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கட்டுப்படுத்தப்பட்ட  பொருளான திரவமய எரிவாயுவை  வைத்திருப்பது அல்லது சேமித்து வைப்பது போன்ற குற்றங்களைப்  புரிந்ததாக சந்தேகிக்கப்படுவதால்  அந்த நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

விசாரணைக்கு உதவுவதற்காக மொத்தம் 28 எரிவாயு சிலிண்டர்கள்  மற்றும் சில வணிக ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.  அந்த எரிவாயு விநியோகம் செய்த மொத்த விற்பனை நிறுவனம் மீதும் விசாரணை நடத்தப்படும் என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


Pengarang :