அபாயகர ஆயுதங்கள், போலீஸ் உபகரணங்களை வைத்திருந்த மூவர் கைது

ஈப்போ, ஜூன் 22- கொள்ளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அபாயகர ஆயுதங்கள் மற்றும் போலீஸ் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததற்காக மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை 6.10 மணியளவில் சுங்கை செனாம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட  பெரேடுவா அல்ஸா ரகக் கார் ஒன்றை தாங்கள் தடுத்து நிறுத்தியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமது கூறினார்.

அக்காரிலிருந்து மூவர் மீதும் அந்த வாகனம் மீது நடத்தப்பட்ட சோதனையில் அபாயகர ஆயுதங்களும் போலீசார் பயன்படுத்தும் உபகரணங்களும் சட்டத்திற்கு புறம்பான முறையில் இருப்பது  கண்டறியப்பட்டது என்றார் அவர்.

இந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளையும் கைது செய்ததன் மூலம் ஈப்போ வட்டாரத்தில் போலீஸ்காரர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து நிகழ்த்தப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனத் தாங்கள் நம்புவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சந்தேகப்பேர்வழிகள் மீது நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்கள் அனைவரும் போதைப் பொருளை உட்கொண்டிருந்த து கண்டறியப்பட்டது என்றார் அவர்.

அவர்கள் அனைவரும் குற்றவியல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான முந்தைய குற்றப்பதிவுகளை கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட 27 முதல் 37 வயது வரையிலான அந்த மூன்று ஆடவர்களும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  குறிப்பிட்டார்.


Pengarang :