NATIONAL

மக்களவைக்கு முந்தையக் கூட்டத்தில் இலக்கு மானியம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன

புத்ராஜெயா, ஜூன் 24 – இன்று  தொடங்கி எதிர்வரும் ஜூலை 18 வரை நடைபெறவுள்ள  மக்களவைக் கூட்டத்திற்கு  முந்தைய  மன்றக் கூட்டத்தில் டீசல் மானிய மறுசீரமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

இங்குள்ள ஸ்ரீ பெர்டானாவில் நேற்று  நடைபெற்ற இக்கூட்டத்தின்போது, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய மசோதாக்கள் தொடர்பான பல விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர்  வழக்கமாக நடைபெறும் இது  முன்சபை கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில்  தற்போதைய பிரச்சனைகள் மற்றும் முன்வைக்கப்பட வேண்டிய பல மசோதாக்கள் குறித்து எங்களுக்கு விளக்கப்பட்டது.

இதில் மிக முக்கியமானது  இலக்கு டீசல் மானியம் தொடர்பான அம்சங்களாகும்.  நாடாளுமன்ற மன்ற நிகழ்ச்சி நிரல் மற்றும் பல்வேறு சட்டத் திருத்தங்கள் உட்பட  நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள  விவாதங்களுக்குத்  தயாராவது குறித்து அவை  உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது  என்றார் அவர்.

ஜசெக கட்சியின் மகளிர்ப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த அரசியல் தலைமைத்துவ கல்வி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

நேற்று மாலை 4.00  மணிக்குத் தொடங்கிய  இந்த மக்களவைக்கு முந்தைய மன்றக் கூட்டத்திற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கினார். இதில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில்,  ஓற்றுமை  அரசாங்கத்தில் சேர பாஸ் கட்சி  அழைக்கப்படும் என்றக் கூற்றை  லோக் மறுத்தார். ஒற்றுமை அரசாங்கத்தில் பாஸ் கட்சி சேர்வதற்கான சாத்தியத்தை  அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில்  உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்ற ஊடகச் செய்திகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாஸ் கட்சி ஒற்றுமை  அரசாங்கத்தில் இணைவது பற்றி எந்த விவாதமும் இல்லை. ஃபாஹ்மி கூறியதை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் என நினைக்கிறேன் என லோக் சொன்னார்.


Pengarang :