NATIONAL

சுங்கத் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு- குற்றவளிகளைப் பிடிப்பதில் தாய். அரசுடன் போலீஸ் ஒத்துழைப்பு

கோத்தா பாரு, ஜூன் 24 – சுங்கத் துறை அதிகாரிகள் மீது மூன்று முறை
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைப் பிடிப்பதில் தாய்லாந்து
அதிகாரிகளுடன் அரச மலேசிய போலீஸ் படை ஒத்துழைப்பை நல்கி
வருகிறது.

கடந்த புதன் கிழமை தும்பாட், கம்போங் சிம்பாங்கானில் போக் மாட்
சட்டவிரோ தளம் அருகே பெட்ரோல் மற்றும் டீசல் கடத்தல்
நடவடிக்கையை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுங்கத் துறை
அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு
நடத்தினர்.

இச்சம்பவம் இரு நாடுகளுடனான உறவு சம்பந்தப்பட்டதாக உள்ளதால்
இது குறித்து தாங்கள் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக கிளந்தான்
மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது ஜாக்கி ஹருண் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் அன்றைய தினமே (புதன்) நாங்கள்
புகாரைப் பெற்றோம். இது குறித்து நாங்கள் தாய்லாந்து போலீசாருடன்
தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம் என்று நேற்று இங்குள்ள மாநில
போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில்
அவர் குறிப்பிட்டார்.

எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக மலேசிய-தாய்லாந்து
எல்லையில் பொது தற்காப்பு படைப் பிரிவு ரோந்து நடவடிக்கையை
அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், இது போன்ற சோதனை
நடவடிக்கைகளைத் தனியாக மேற்கொள்ள வேண்டாம் என சுங்கத் துறை
அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இது போன்றத் தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி
செய்ய இதர பாதுகாப்பு அமைப்புகளுடன் தாங்கள் கலந்தாலோசிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பதுக்கல் மற்றும் கடத்தல் கும்பலின் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து
எல்லையில் அமலாக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள்
எப்போதும் விழிப்புடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும் என்றும்
அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :