NATIONAL

இன்றைய மக்களவைக் கூட்டத்தில் சூலு கோரிக்கை, இணைய விபச்சாரம் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூன் 24- இன்று தொடங்கும் 15வது நாடாளுமன்றத்தின்
மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடரில் சூலு வாரிசுகளின்
கோரிக்கை, இணைய விபச்சாரம் மற்றும் இரண்டாவது கடலோர
காவல்படைக் கப்பலின் (எல்.சி.எஸ்.) ஆகக் கடைசி மேம்பாடு குறித்து
விவாதிக்கப்படும்.

இந்த கேள்விகள் அனைத்தும் வாய்மொழிக் கேள்வி மற்றும் பதில்
அங்கத்தின் போது எழுப்பப்படும் என நாடாளுமன்ற அகப்பக்கத்தில்
வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு முறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூலு தரப்பினர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் தொடர்பான சமீபத்திய
நிலவரம் மற்றும் இந்த வழக்கு இறுதி செய்யப்படுவதற்கான காலக் கெடு
குறித்து செலாயாங் ஹராப்பான் உறுப்பினர் வில்லியம் ஜீ வீன்
பிரதமரிடம் கேள்வியெழுப்புவார்.

சமூக ஊடகங்களின் இருண்ட பக்கத்தை கையாள அரசாங்கம் எடுத்துள்
நடவடிக்கை மற்றும் எக்ஸ், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள்
வாயிலாக இணைய விபசாரத்தை மேற்கொண்டு வரும் தரப்பினரை
சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முன்னெடுப்புகள் குறித்து பியூபோர்ட்
தொகுதி பாரிசான் நேஷனல் உறுப்பினர் டத்தோ சித்தி அமினா ஆச்சிங்
தொலைத் தொடர்பு அமைச்சரிடம் வினவுவார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு
அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செரியான்
தொகுதி ஜ.பி.எஸ். உறுப்பினர் டத்தோஸ்ரீ ரிச்சர் ரியோட் அனாக் ஜயேம்
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சரிடம் வினா தொடுப்பார்.

பாலஸ்தீனத்தின் இறையாண்மையைக் காக்கும் முயற்சியில் இரு
அரசாங்கத் தீர்வு கொள்கையை மறுஆய்வு செய்யும் அரசாங்கத்தின்
திட்டம் குறித்து மாராங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ அப்துல் ஹாடி அவாங் வெளியுறவு அமைச்சரிடம் விளக்கம் கோருவார்.

பதிவு செய்யப்படாத சிறார் பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கை மற்றும்
அத்தகைய மையங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள் குறித்து
பாகான் செராய் பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ இட்ருஸ்
அகமது மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரிடம்
கேள்வியெழுப்புவார்.

கேள்வி பதில் அங்கம் முடிந்தவுடன் 2024 மலேசிய வான் போக்குவரத்து
ஆணைய (கலைப்பு) மற்றும் மலேசியா சிவில் வான் போக்குவரத்து
முகமை (திருத்தம்) மசோதாவை போக்குவரத்து அமைச்சர் அவையில்
தாக்கல் செய்வார்.


Pengarang :