NATIONAL

இ.சி.ஆர்.எல். திட்டம்- கிளந்தானில் 79 விழுக்காட்டுப் பணிகள் பூர்த்தி

கோத்தா பாரு, ஜூன் 24- கிழக்குக் கரை இரயில் திட்டத்தின் (இ.சி.ஆர்.எல்.)
கிளந்தான் மாநிலத்தை உள்ளடக்கிய 43 கிலோ மீட்டர் பகுதியில் கடந்த
மாதம் வரை 79.81 விழுக்காட்டுப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக
மலேசிய ரெயில் லிங்க் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை
நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாடர்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.

கோத்தா பாரு முதல் கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம்
(ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம்) வரையில் இரயில் தடம்
அமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கேற்ப
இத்திட்டத்தின் மேம்பாடு அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.

கிளந்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த இ.சி.ஆர்.எல். திட்டம்
கோத்தா பாருவில ஒரு பயணிகள் முனையத்தையும் பாசீர் பூத்தேவில்
பயணிகள் மற்றும் சரக்கு முனையத்தையும் கொண்டிருக்கும் என்று அவர்
தெரிவித்தார்.

கோத்தா பாரு முனையம் குறித்து விவரித்த அவர், இம்முனையம் பல
பிளாட்பார்ம்கள், பரந்த கார் நிறுத்துமிடம், பயணிகளை ஏற்றி, இறக்கும்
பகுதி, நடைபாதை, பணியாளர்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட
வசதிகளைக் கொண்டிருக்கும் என்று சொன்னார்.

பண்டார் தஞ்சோங் பாருவிலுள்ள இ.சி.ஆர்.எல். நிலையத்திற்கு கிளந்தான்
பட்டத்து இளவரசர் தெங்கு முகமது ஃபாக்ரி பெத்ரா மேற்கொண்ட
வருகையை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைக்
கூறினார்.

தெங்கு முகமது அந்த முனையத்திற்கு வருகை புரிவதற்கு முன்னர்
அவருக்கு அந்த இரயில் திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது என்று
டார்விஸ் தெரிவித்தார்.

இந்த இ.சி.ஆர்.எல். திட்டம் நிர்ணயிக்கப்பட்டபடி வரும் 2026ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் முற்றுப் பெற்று 2027 ஜனவரியில் செயல்படத் தொடங்கும் என்று நாம் நம்புவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்னதாகக் கூறியிருந்தார்.

கோத்தா பாரு நகரையும் கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து
முனையத்தையும் இணைக்கும் 665 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த
இ.சி.ஆர்.எல். திட்டம் 5,027 கோடி வெள்ளி செலவில் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.


Pengarang :