NATIONAL

மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

பத்து பகாட், ஜூன் 24: தஞ்சோங் செகன்திங் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போனவர்களில் மேலும் ஒருவரின் சடலம் கோரிஸ் கடற்கரை, செங்கராங்கில் நேற்று காலை 11.30 மணியளவில் பொதுமக்களால் காணப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தான் ஹாய் கியான் (62) என்பவரின் உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டதாகப் பத்து பகாட் கடல்சார் மண்டல இயக்குனர் கமாண்டர் முகமட் ஹனிஃப் முகமட் யூசுப் தெரிவித்தார்.

நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை (Op Carilamat), கடலில் 129 கடல் மைல்கள் விமானம் மூலம் மற்றும் 104 கடல் மைல் பரப்பளவு உள்ளடக்கிய பகுதிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை மோசமான வானிலை காரணமாகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நான்கு மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், ஒரு மீனவர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நேற்று, சியா கா சோங் (53) என்பவரின் சடலம், படகு கவிழ்ந்த தாக கூறப்படும் பகுதியில் சென்ற மீனவ படகு ஒன்றால் இரவு 7 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :