SELANGOR

பெட்டாலிங் ஜெயா செக்சன் 22 நீர் விநியோகப் பிரச்சனைக்கு ஜனவரி மாதம் தீர்வு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 –  இங்குள்ள செக்சன் 22 பகுதியைச் சேர்ந்த 290 வீடுகளின் குடியிருப்பாளர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எதிர்நோக்கி வரும் குடி நீர் விநியோகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக அப்பகுதியில் குழாய்களை மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த மே 29 ஆம் தேதி  தொடங்கிய இந்த  திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முற்றுப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகக் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறினார்.

கடந்த 2018 மற்றும் 2019க்கு இடையில், நீர் இடையூறு பிரச்சனை வழக்கமானதாக இருந்தபோது  செக்சன் 22 பகுதி பெரும்பாலும் நீர் துண்டிப்பு நிகழும் முதல் இடமாகவும் நீர் விநியோகம் திரும்ப கிடைக்கும் கடைசி இடமாகவும்  இருந்து வந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு  எங்கள் தொகுதி சேவை மையம்  கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக குழாய் மாற்றும் திட்டத்தை அமல்படுத்த சம்பந்தப் பட்டத் தரப்பினரை வலியுறுத்தி வந்தது.

செக்சன் 14 இல் மேற்கொள்ளப்பட்ட குழாய்களை மாற்றும் பணி அங்கு நிலைமையை மேம்படுத்தியிருந்தாலும்  செக்சன் 22 இல் மேற்கொள்ளப் படவிருக்கும் குழாய் மாற்றும் பணியினால் இங்கு நீர் விநியோகம்  சீர்படும் என நம்புகிறோம் என்று அவர் இன்று செக்சன் 22 குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

செக்சன் 22  குழாய்கள் நீண்ட காலமாக மாற்றப்படவில்லை என்பது தெரிய வருகிறது எனக் கூறிய அவர், கடைசியாகச் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குழாய் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது  என்றார்.

கடந்த  2018 மற்றும் 2019 க்கு இடையே செக்சன்  22 குடியிருப்பாளர்கள்  மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கியதாக லிம் கூறினார்.

இதற்கிடையில்,  குழாய் மாற்றும் பணிகளால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு அப்பணிகள் மேற்கொள்ளப் படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவிப்பை வெளியிடும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த குழாய் மாற்றும் பணிகளால் ஜாலான் 22/49, லோரோங் 22/49 ஏ, ஜாலான் 22/32, ஜாலான் 22/51, ஜாலான் 22/47, ஜாலான் 22/34, ஜாலான் 22/34 ஏ, ஜாலான் 22/45, ஜாலான் 22 /57, ஜாலான் 22/38, ஜாலான் 22/36, ஜாலான் 22/42, ஜாலான் 22/55, ஜாலான் 22/53, ஜாலான் 22/28, ஜாலான் 22/40, மற்றும் லோரோங் 22/42  ஆகிய சாலைகள் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :