NATIONAL

அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் அக்.14 முதல் டிச.12 வரை நடைபெறும்

கோலாலம்பூர், ஜூன் 24 – பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் முன்றாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடர் வரும் அக்டோபர் 14 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறும். இக்கூட்டத் தொடரை அக்டோபர் 7 முதல் டிசம்பர் 5 வரை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மக்களவையின் இரண்டாம் கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றிய சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல், அடுத்தக் கூட்டத் தொடர் 35 நாட்களுக்கு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இந்த தேதி மாற்றத்திற்கு அவையின் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தின் 11(2) நிரந்தர விதிகளுக்கேற்ப ஒப்புக் கொண்டார் என அவர் சொன்னார்.

இந்த மாற்றம் தொடர்பான கடிதம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த ஜூன் 14ஆம் தேதி அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாய்மொழி கேள்வி மற்றும் பதில் அங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு நேரத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விதிகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் அதிகமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

இதற்கிடையே, கடந்த மே மாதம் 10ஆம் தேதி காலமான மேலவை சபாநாயகர் டத்தோ முத்தாங் தகால் மற்றும் .ஏப்ரல் 17ஆம் தேதி காலமான பென்சியாங்கான் முன்னாள் எம்.பி. டான்ஸ்ரீ ஜோசப் குருப்பின் குடும்பத்தினருக்கு மக்களவையில் இன்று அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் இந்த இழப்பினால் ஏற்பட்ட துயரத்தை தாங்கிக் கொள்ளும் மனவலிமையைப் பெற்றிருப்பர் எனத் தாம் நம்புவதாக ஜோஹாரி சொன்னார்.

பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான முதலாவது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 14 மசோதாக்களுக்கு மேன்மை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :