மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் தாய் படுகொலை- பகாவ் நகரில் சம்பவம்

சிரம்பான், ஜூன் 26- மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் வயது முதிர்ந்த தாய் படுகொலை செய்யப்பட்டார். நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் பகாவ் நகரிலுள்ள வீடமைப்புப் பகுதி ஒன்றில் நேற்று நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.55 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ஹோ சாங் ஹூக் கூறினார்.

 சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 63 வயதான அந்த மூதாட்டி வீட்டின் வரவேற்புக் கூடத்தில் தரையில் சுயநினைவற்றுக் கிடப்பதைக் கண்டதாகவும் இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் அந்த மூதாட்டிக்கும் அவரின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

சந்தேகப் பேர்வழியான அந்த மூதாட்டியின் 33 வயது மூத்த மகன் மாற்றுத் திறனாளிக்கான (மனநல பாதிப்பு) அடையாள அட்டையை வைத்துள்ளார். அவ்விருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. எனினும், ஆயுதத்தால் எந்த காயமும் ஏற்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அவ்வீட்டிலிருந்த சந்தேகப் பேர்வழி யைத் தாங்கள் கைது செய்ததாகக் கூறிய அவர், அம் மூதாட்டியின் மரணத்திற்கான காரணத்தை தாங்கள் ஆராய்ந்து வருவதாகச் சொன்னார். இறந்த மூதாட்டியின் உடல் சவ பரிசோதனைக்காக துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

அந்நபரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கு பகாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று அனுமதி பெறப்படும் எனக் கூறிய அவர், இச் சம்பவத்தில் பலியான மூதாட்டியின் படத்தை பகிர  வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்


Pengarang :