NATIONAL

எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த பெருந் திட்டம்- உள்துறை அமைச்சு உருவாக்குகிறது

கோலாலம்பூர், ஜூன் 27- மலேசிய எல்லைகளில் பாதுகாப்பை மேலும்
வலுப்படுத்துவதற்காக தேசிய எல்ல பாதுகாப்பு கட்டுப்பாடு மீதான
பெருந்திட்டத்தை உள்துறை அமைச்சு உருவாக்கி வருகிறது.

அமைச்சுகள் மற்றும் எல்லை பாதுகாப்பில் சம்பந்தப்பட்டுள்ள இதர அரசு
நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வியூகம் மற்றும் செயல்
திட்டங்களை உருவாக்குவதன் மூலம் ஒரு விரிவான பெருந்திட்ட
கட்டமைப்பை இது வழங்குவதாக நாடாளுமன்றத்தில் இன்று வழங்கிய
எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு கூறியது.

இந்த பெருந்திட்டம் இரு வியூக இலக்குகளின் அடிப்படையில்
செயல்படுத்தப்படும். தேசிய எல்லை பாதுகாப்பு கட்டுப்பாட்டு
நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் தேசிய எல்லை
கட்டுப்பாட்டின் ஆற்றலை மேம்படுத்துவது ஆகியவை அவ்விரு வியூக
இலக்குகளாகும் என அது தெரிவித்தது.

தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கான இந்த வியூக
இலக்கு வடக்கு (கெடா, பெர்லிஸ் பேராக்). கிழக்கு (கிளந்தான், திரங்கானு,
பகாங்), தெற்கு (சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர்)
மற்றும் சபா, சரவா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ஐந்து முனை
அணுகுமுறையின் அடிப்படையில் அமல்படுத்தப்படும்.

இந்தோனேசியா-சரவா எல்லையில் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள்
மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களின் கடத்தலை முறியடிப்பதில்
சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளின் அதிகார வரம்பு மற்றும் ஒத்துழைப்பை
உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து மாஸ் காடீங் உறுப்பினர்
மோர்டி பிமோல் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு
பதிலளித்துள்ளது.

எல்லை பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்துவதற்கான முயற்சியாக தேசிய எல்லை பாதுகாப்பு
கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கான சாத்திய ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.


Pengarang :