NATIONAL

சிலாங்கூர் எஃப்சியின் அபராதத் தொகையை அல்டிமெட் வழங்க முன்வந்துள்ளார்

ஷா ஆலம், ஜூன் 27: கடந்த மே 10ஆம் தேதி, சும்பாங்சிஹ் போட்டியிலிருந்து சிலாங்கூர் எஃப்சி விலகியதைத் தொடர்ந்து, அதன் அபராதத் தொகையை செலுத்த உதவுவதற்காக இந்த ஆண்டு தனது அறிவுசார் சொத்து ராயல்டி சேகரிப்பில் பாதியை நன்கொடையாக வழங்க பாடகரும் இசையமைப்பாளருமான அல்டிமெட் முன்வந்தார்.

அவர் லெம்பா ஜெயா தொகுதி  சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

“எஃப்சி அணி ஏற்கத் தயாராக இருந்தால் இந்த அபராதத்தைச் செலுத்த எனது அறிவுசார் சொத்துக்கான ராயல்டி வசூலில் பாதியை நன்கொடையாக வழங்குவேன்,” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் அந்த அணிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான செய்தி இணைப்பைச் சேர்த்து சுருக்கமாகக் கூறினார்.

முன்னதாக, சுல்தான் இப்ராஹிம் அரங்கத்தில் ஜோகூர் டாருல் தாசிம் அணிக்கு எதிரான சும்பங்சிஹ் போட்டியில் விளையாடததைத் தொடர்ந்து எஃப்சி அணிக்கு RM100,000 அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் 2024/2025 சூப்பர் லீக்கில் மூன்று புள்ளிகள் குறைக்கப் பட்டதாக மலேசிய கால்பந்து லீக் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சீசனின் தொடக்கப் போட்டிக்கான ஹோஸ்ட் அணியாக இருந்த ஜோகூர் டாருல் தாசிம் அணிக்கும் மற்றும் மலேசிய கால்பந்து லீக்கும் ஏற்பட்ட இழப்புகளுக்கு சிலாங்கூர் எஃப்சி அணி இழப்பீடு வழங்க வேண்டும், தொகை பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழக அரங்கில் (எம்பிபிஜே) சிலாங்கூர் மற்றும் ஜேடிடி இடையேயான 14வது சூப்பர் லீக் போட்டியும் பார்வையாளர்களின்றி நடைபெறும்.

மே 5 அன்று, நட்சத்திர விளையாட்டாளர் முகமட் பைசல் அப்துல் ஹலிம் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் எஃப்சி இப்போட்டியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :