NATIONAL

சுங்கத் துறை அதிரடிச் சோதனை- சிகிரெட் உள்ளிட்ட பொருள்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு

கிள்ளான், ஜூன் 27- அரச மலேசிய சுங்கத் துறையின் மத்திய 11
பிராந்தியம் (சிலாங்கூர்) கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் அண்மையில்
மேற்கொண்ட ஆறு அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் ஸாம்ஸாம் நீர்,
சிகிரெட் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட
பொருள்களின் மதிப்பு வரியுடன் சேர்த்து 730,530 வெள்ளி என
மதிப்பிடப்பட்டது.

கடந்த மே 21ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள கிடங்கு ஒன்றில்
நடத்தப்பட்ட சோதனையில் 117,200 வெள்ளி மதிப்புள்ள 4,685 லிட்டர்
ஸாம்ஸாம் நீர் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சுங்கத் துறையின் மத்திய
பிராந்திய உதவி தலைமை இயக்குநர் நோர்லீலா இஸ்மாயில் கூறினார்.

இப்பொருள்களுக்கான இறக்குமதி பெர்மிட்டை காட்டத் தவறியதைத்
தொடர்ந்து அந்த கிடங்கின் மேலாளரான உள்நாட்டு ஆடவர் கைது
செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

ஸாம்ஸாம் நீர் அல்லது கனிம நீர் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட
பொருள்களாக விளங்குகின்றன. முறையான உரிமம் பெற்றவர்கள்
மட்டுமே அவற்றை இறக்குமதி செய்ய முடியும். இந்த பறிமுதல்
தொடர்பில் 1967ஆம் ஆண்டு சுங்கத் துறைச் சட்டத்தின் 135(1)(ஏ) பிரிவின்
கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

இம்மாதம் 13ஆம் தேதி வட துறைமுகத்தில் உள்ள கிடங்கிலும் எழு
தினங்களுக்குப் பின்னர் ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள பயன்படுத்தப்படாத
வளாகம் ஒன்றிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 505,100 வெள்ளி
மதிப்புள்ள 670,000 சிகிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர்
குறிப்பிட்டார்.

வட கிள்ளான் துறை முகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்,
கப்பல் ஆவணங்களில் சைக்கிள் பாகங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்புவதற்காக ஸ்ரீ கெம்பாங்கானில்
பயன்படுத்தப்படாத வளாகத்தை கடத்தல் பொருளை வைக்கும் கிடங்காக
கும்பல்கள் பயன்படுத்தியுள்ளன என்று அவர் சொன்னார்.


Pengarang :