NATIONAL

இலகு ரக விமானம் அவரசத் தரையிறக்கம்-விமானி, பயிற்சி விமானி உயிர்த் தப்பினர்

ஷா ஆலம், ஜூன் 28- இலகு ரக விமானம் ஒன்று நேற்று கோலக்
கிள்ளானில் உள்ள காலி இடத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. அந்த
பைப்பர் பிஏ-28-161 ரக விமானத்தின் விமானியும் பயிற்சி விமானியும்
காயம் ஏதுமின்றி உயிர்த்தப்பியதகாச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறை கூறியது.

விமானி ரோலாண்டோ பார்பா ஜேஆர் மற்றும் பயற்சி விமானி முகமது
ரிட்ஸ் ஃபர்ஹான் ரிட்சுவான் பயணித்த அந்த விமானம் நேற்று மாலை
அவசரமாகத் தரையிறங்கியதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.13 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து ஐந்து அதிகாரிகள் மற்றும் 17 உறுப்பினர்கள்
அடங்கிய குழு மூன்று தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு
விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

மாலை 4.42 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்த மாநில நடவடிக்கை
அதிகாரி முஸ்தாகின் ரிமோன் தலைமையிலான குழு அந்த விமானத்தில்
தீ ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உறுதி செய்தது என்று அவர்
சொன்னார்.

இந்த சம்பவத்தில் விமானிக்கும் துணை விமானிக்கும் எந்த காயமும்
ஏற்படவில்லை என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் கோலக் கிள்ளான் வட கிள்ளான் மற்றும் தென்
கிள்ளான் தீயணைப்பு நிலையங்கள் ஈடுபட்டன என்றும் அவர்
குறிப்பிட்டார்.

சுபாங் விமானக் கிளப்புக்குச் சொந்தமான அந்த விமானம் நேற்று மாலை
2.50 மணியளவில் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக மலேசிய பொது வான் போக்குவரத்து முகமை (சி.ஏ.ஏ.எம்.) முன்னதாகக் கூறியிருந்தது.

மாலை 2.58 மணியளவில் அந்த விமானத்திடமிருந்து அவசர அழைப்பு
கிடைத்ததைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது
என்று அது தெரிவித்தது.


Pengarang :