NATIONAL

மொத்தம் 14,490 இணைய மோசடி வழக்குகள் பதிவு

கோலாலம்பூர், ஜூன் 28: ஜனவரி முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 14,490 இணைய மோசடி வழக்குகள் RM581 மில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

இணைய மோசடி வழக்குகளில் தொலைத்தொடர்பு குற்றங்கள், மின்-நிதி குற்றங்கள், காதல் மோசடிகள், மின்-வணிகக் குற்றங்கள், கடன் உதவி மற்றும் இல்லாத முதலீடுகள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

“மேலும், 2022ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை 25,479 ஆகவும், 2023 இல் 34,495ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்த இழப்பு 2022இல் RM851 மில்லியனுக்கும் அதிகமாகவும், 2023இல் RM1 பில்லியனுக்கும் அதிகமாகவும் இருக்கும்,” என்று அவர் மக்களவையில் சிறப்பு அமர்வில் தெரிவித்தார்.

மோசடிக்கு ஆளாகும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து விவியன் வோங் ஷிர் யீ (ஹராப்பான் சண்டாக்கான்) கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கடந்த மே மாதம் வரை, நீதிமன்றத்தில் 5,933 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கிய மொத்தம் 7,960 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

” இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை 3,689 குற்றத் தடுப்பு திட்டங்களைச் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) ஏற்பாடு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

ஊழல் குற்றங்களை முறியடிக்கும் வகையில், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் திறம்பட விசாரிக்க தற்போதுள்ள சில சட்டங்களை திருத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :