NATIONAL

சிலாங்கூர் ஆக்கத்திறன் நகர் மாநாட்டை நடத்த பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திற்கு வாய்ப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 28- சிலாங்கூர் ஆக்கத்திறன் நகர் மாநாட்டை
ஏற்று நடத்தும் பொறுப்பை மாநில அரசு பெட்டாலிங் ஜெயா மாநகர்
மன்றத்திற்கு (எம்.பி.பி.ஜே.) வழங்கியுள்ளது.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் சிலாங்கூரில் ஆக்கத்திறன் நகரை
உருவாக்குவதற்கான புளுபிரிண்ட் எனப்படும் பெருந்திட்டத்தை தயாரிப்பது
குறித்து விவாதிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளதாக மாநில
அரசின் துணைச் செயலாளர் (மேம்பாடு) டத்தோ ஜோஹாரி அனுவார்
கூறினார்.

சிலாங்கூர் கிரியேட்டிவி சிட்டிஸ் நெட்வேர்க்கை ( சிலாங்கூர்
ஆக்கத்திறன் நகர ஒருங்கமைப்பு- எஸ்.சி.சி.என்.) உருவாக்குவதன் மூலம்
யு.சி.சி.என். எனப்படும் யுனைஸ்கோ கிரியேட்டிவ் சிட்டி அங்கீகாரத்தைப்
பெறுவதை இந்த மாநாடு பிரதான இலக்காகக் கொண்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.

கடந்தாண்டு வரை உலகம் முழுவதும் 330 நகரங்கள் யு.சி.சி.என். கீழ்
பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் சரவா மாநிலத்தின் கூச்சிங்
செலாத்தான் நகர் மற்றும் பேராக் மாநிலத்தின் ஈப்போ நகர் ஆகியவையும்
அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள சிவிக் சென்டரில் நடைபெற்ற சிலாங்கூர் ஆக்கத்திறன்
நகர் மாநாடு தொடர்பான நிகழ்வில் முக்கிய உரை நிகழ்த்திய போது
அவர் இதனைக் கூறினார்.

மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் ஆக்கத்திறன் சார்ந்த
சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் இந்த எஸ்.சி.சி.என். அமைப்பில் இடம்
பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாநில அரசு விரும்புவதாக
அவர் சொன்னார்.

ஆக்கத் திறன் மற்றும் கலாசாரத் துறையை அடிப்படையாகக் கொண்ட
நிலையான நகர மேம்பாட்டை உறுதி செய்வதற்கு ஏதுவாக
மாநிலத்திலுள்ள நகரங்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்பெறச்
செய்வதில் இந்த எஸ்.சி.சி.என். முக்கிய பங்காற்றும் என்றார் அவர்.


Pengarang :