NATIONAL

ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறவதைத் தடுக்க கல்வியமைச்சு நடவடிக்கை

நிபோங் திபால், ஜூன் 28- ஆசிரியர்கள் மத்தியில் தன்முனைப்பை
அதிகரிக்கவும் அவர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதைத் தடுக்கவும்
கல்வியமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவர்களை உற்சாகப்படுத்த பல்வேறு செயல்முறைகளை
அமல்படுத்துவதோடு பதவி உயர்வு தொடர்பான நிர்வாக
நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம் என்று கல்வியமைச்சர்
ஃபாட்லினா சீடேக் கூறினார்.

உடல் நலம், ஆசிரியர் தொழிலைத் தொடர்வதில் ஆர்வமின்மை மற்றும்
குடும்பப் பிரச்சனை ஆகியவை காரணமாகப் பல ஆசிரியர்கள்
முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புகின்றனர் எனத் தாம் கருதுவதாக
அவர் சொன்னார்.

நேற்றிரவு இங்குள் சுங்கை டூரி இரவுச் சந்தையைப் பார்வையிட்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். சுங்கைப்
பாக்காப் இடைத் தேர்தலுக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்
ஜோஹாரி அரிபினும் அப்போது உடனிருந்தார்.

ஆசிரியர்கள் வருவதும் செல்வதும் இயல்பு என்பதால் அவர்களின்
முன்கூட்டியே ஓய்வு பெறும் போக்கு நாட்டின் கல்வி முறையில்
பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஃபாட்டிலினா தெரிவித்தார்.

கல்விச் சேவை ஆணையத்தின் ஒத்துழைப்பின் காரணமாக ஆசிரியர்
தொழிலில் 98 விழுக்காட்டு இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன என்றும் அவர்
சொன்னார்.

இவ்விவகாரத்தில் நாம் பல்வேறு அணுகுமுறைகளைக்
கொண்டிருக்கிறோம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலிருந்து
ஆசிரியர்களைப் பெறுவது, தேவைகேற்ப அவ்வப்போது ஒப்பந்த

அடிப்படையில் சேவையைப் பெறுவது ஆகியவை அந்த
அணுகுமுறைகளில் அடங்கும் என்றார் அவர்.

முன்கூட்டியே பணி ஓய்வு பெறுவதற்கு ஆசிரியர் தொழிலில் தங்களுக்கு
ஆர்வமின்மையே காரணம் என்று பல ஆசிரியர்கள் கடந்த
மூன்றாண்டுகளில் கூறியுள்ளனர் என்று அமைச்சர் முன்னதாக
நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அக்காலக்கட்டத்தில் முன்கூட்டியே ஓய்வு பெற்ற 4,300 முதல் 6,300
வரையிலான ஆசிரியர்களில் 72.36 விழுக்காட்டினர் வழங்கிய பதில்
இதுவாகத்தான் இருந்தது என அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :