SELANGOR

மதிப்பீட்டு வரி உயர்வு- ஆட்சேபம் தெரிவிக்க சுபாங் ஜெயா மக்களுக்கு ஆக.2 வரை வாய்ப்பு

ஷா ஆலம், ஜூன் 28- மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பான அறிக்கையைப்
பெற்ற சொத்து உரிமையாளர்கள் அந்த உத்தேச வரி உயர்வுக்கு எதிராக
எதிர்வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி வரை ஆட்சேபம் தெரிவிக்க சுபாங் ஜெயா
மாநகர் மன்றம் வாய்ப்பு வழங்கியுள்ளது.

மாநகர் மன்றப் பகுதியில் வசிக்கும் 326,646 சொத்து உரிமையாளர்களுக்குக்
கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் புதிய வரி தொடர்பான அறிக்கை தபால்
வழி அனுப்பப்பட்டு வருவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு
மற்றும் வியூக மேலாண்மைப் பிரிவு கூறியது.

இந்த மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிரான ஆட்சேபனைகளை வரும்
ஆகஸ்டு 2ஆம் தேதிக்கு முன்னதாக https://bantahan.mbsj.gov.my/ என்ற
அகப்பக்கம் வாயிலாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்திற்கு அனுப்பலாம்
என அது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

வருமானம் மற்றும் செலவினத்தை சமநிலைப்படுத்துவது, அதிகரித்து
வரும் மாநகர் மன்றத்தின் செலவுகளை ஈடு செயவது மற்றும் மக்களின்
நலனுக்காக மாநகர் மன்றத்தின் நிர்வாகத்தை செம்மையாகவும் ஆக்கமான
முறையிலும் மேற்கொள்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த
வரி உயர்வு அமல்படுத்தப்படுவதாக மாநகர் மன்றம் தெரிவித்தது.

குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், தொழில்பேட்டைகள், காலி நிலங்கள்
உள்ளிட்ட சொத்துகளுக்கான மதிப்பீட்டு வரி உயர்வு 25 விழுக்காட்டிற்கும்
அதிகமாக இல்லாதிருக்கும் வகையில் வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் புதிய மதிப்பீட்டு வரியை லாமான் கெனாங்கா, முதல் மாடி
விஸ்மா எம்.பி.எஸ்.ஜே, ஜாலான் பெர்பாடுவான், யுஎஸ்ஜே 5 எனும்
முகவரியில் நேற்று தொடங்கி எதிர்வரும் ஆகஸ்டு ‘மாதம் 2ஆம் தேதி வரை
சரிபார்க்கலாம்.

புதிய வரி விதிப்பு எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அமலுக்கு
வருவதாக மாநகர் மன்றம் கூறியுள்ளது.


Pengarang :