NATIONAL

இராணுவ ஹெலிகாப்டர் குளுவாங்கில் அவசர தரையிறக்கம்- மூவர் காயம்

குளுவாங், ஜூன் 28 – இன்று விடியற்காலை 1.35 மணியளவில் கேம் மக்கோத்தா தரைப்படையின் 881வது வான் பிரிவு விமான தளத்தில், இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று  அவசரமாகத் தரையிறங்கியது.

அந்த ஹெலிகாப்டரில் அதன் பயிற்றுநர், பயிற்சி மாணவர் மற்றும்  குவாட்டர்மாஸ்டர் ஆகியோர் இருந்ததாகத் தரைப்படையின் பொது உறவுப் பிரிவு அறிக்கை ஒன்றில் கூறியது.

வான் இராணுவ வீரர்களுக்கான ‘அடிப்படை அதிகாரி பயிற்சி‘யின் ஒரு பகுதியாக இரவு நேரப் பயிற்சியில் அந்த ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அது தெரிவித்தது.

அந்த ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் சுயநினைவுடன் உள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடக்கக்கட்ட பரிசோதனையில் உடலில் எலும்பு முறிவு, காயம் உள்ளிட்ட பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இருப்பினும் அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதோடு, மேல் சிகிச்சைக்காக அவர்கள் என்ஸி பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த ஹெலிகாப்டர் பறப்பதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக விசாரணை வாரியம் கூட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆருடங்களை  வெளியிட வேண்டாம் என பொது மக்களை அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது.


Pengarang :