NATIONAL

சிலாங்கூர் சுல்தானுடன் அமைச்சர் ஃபாஹ்மி சந்திப்பு

ஷா ஆலம், ஜூன் 28 – தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தான்  ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை நேற்று இஸ்தானா கயாங்கானில் சந்தித்தார்.

வரும் ஜூலை 20ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் நடைபெறவிருக்கும் மாட்சிமை தாங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிமின் முடிசூட்டு விழாவிற்கான  அரச அழைப்பினை வழங்கும் நோக்கில் ஃபாஹ்மி இந்த சந்திப்பை நடத்தினார்.

மாமன்னரின் அரியணை அமரும் விழாவுக்கான சிறப்பு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக ஃபாஹ்மி உள்ளார்.

மலேசியாவின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி  பதவியேற்றார்.

இந்த முடிசூட்டு விழாவை முன்னிட்டு  மாமன்னரின் ஒப்புதலுடன் பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  ஃபாஹ்மி கடந்த 16ஆம் தேதி கூறியிருந்தார்.

தேசியப் பள்ளிவாசலில் யாசின் ஓதுதல் மற்றும் துவா செலமாட் நிகழ்வு,  கோம்பாக்கில் உள்ள பூர்வக்குடியினர் மருத்துவமனைக்கு அரச தம்பதியர் வருகை  மற்றும் தேசிய அருங்காட்சியகத்தில் ராஜா கித்தா கண்காட்சி ஆகியவை முடிசூட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் அடங்கும்.


Pengarang :