SELANGOR

குழந்தைகளுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை திட்டம்

ஷா ஆலம், ஜூன் 28: நாளை கம்போங் துங்கு தொகுதியில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அவர்களின் உடல் எடை, வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறினார்.

இந்நிகழ்வு கம்போங் பாரு சுங்கை வே பல்நோக்கு மண்டபத்தில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். சிலாங்கூரில் பிறந்த அல்லது வசிக்கும் குழந்தைகள், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சிலாங்கூர் வாக்காளர்களாக இருத்தல் வேண்டும் மற்றும் வெளிப்படையான உடல் ஊனங்கள் இல்லாத குழுந்தைகள் ஆகியோர் இப் பரிசோதனைக்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்துடன் (UIAM) இணைந்து மேற்கொள்ளப்படும் மாநில அரசின் இந்த முயற்சியானது அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாட் (அசாஸ்) திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

“இந்நிகழ்வு குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றிய பிரச்சனையை களைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சனை மலேசியாவில் 10 குழந்தைகளில் ஏழு பேரை பாதிக்கிறது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

“நீங்கள் நேரடியாக (வாக்-இன்) நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வரலாம். முதல் 100 பேருக்கு இலவசக் கோத்தா பால் வழங்கப்படும்” என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, அசாஸ் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஐந்து வயது மற்றும் அதற்கு குறைவான 1,825 குழந்தைகள் ஊட்டச்சத்து உதவி பெற்றனர்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றிய மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டைக் கட்டுப் படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.


Pengarang :