NATIONAL

ஒற்றுமை அரசு இந்திய சமூகத்தை ஒருபோதும் புறக்கணித்ததில்லை – மந்திரி புசார் கூறுகிறார்

நிபோங் திபால், ஜூலை 1- ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமூகத்தை
ஒருபோதும் புறக்கணித்ததில்லை. மாறாக, அச்சமூகத்தின் நலன் காக்க
பல்வேறு திட்டங்களை அது முன்னெடுத்துள்ளது என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உதாரணத்திற்கு சிலாங்கூர் மாநிலத்தில் தீபாவளி பெருநாள் நிதியுதவி
உள்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு ஆலய உடைப்பு
விவகாரத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கெஅடிலான் கட்சி தலைமையிலான ஒற்றுமை அரசு, பின்னணியைப்
பாராமல் அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து உதவிகளை வழங்கி
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்பு பத்து கேவ்ஸ் என அழைக்கப்பட்ட சுங்கை துவா சட்டமன்ற
உறுப்பினராகக் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நான் இருந்து வருகிறேன்.
ஒவ்வோராண்டு தைப்பூசத்தின் போதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர்
எந்த இடையூறுமின்றி பத்து மலையில் ஒன்று கூடி தங்கள் நேர்த்திக்
கடனை நிறைவேற்றி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை பாக்கப் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக
ஜாவி, செப்பா தோட்டத்தில் உள்ள இந்தியர்களுடன் தேநீர் விருந்தில்
கலந்து கொண்டு உரையாற்றிய போது சிலாங்கூர் மாநில பக்கத்தான்
ஹராப்பான் தலைவருமான அவர் இவ்வாறு சொன்னார்.

இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து காக்கப்படுவதை உறுதி செய்வதற்கு
ஏதுவாக இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் வேட்பாளர் டாக்டர்
ஜோஹாரி அரிபினுக்கு வாக்களிக்கும்படி இந்திய சமூகத்தை அவர்
கேட்டுக் கொண்டார்.

பினாங்கு மாநில அரசின் பிரதிநிதி பினாங்கு அரசுக்குத் தேவை. காரணம்,
எதிர்க்கட்சிகளால் மக்களுக்கு எந்த திட்டத்தையும் அமல்படுத்த முடியாது
என்றார் அவர்.

வழிபாட்டுத தலங்கள், தமிழ்ப்பள்ளிகள் பாதுகாக்கப்படுவதற்கும்
பெருநாளுக்கான தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும்
ஒற்றுமை அரசின் வேட்பாளர் வெற்றி பெறுவது அவசியம் என்றும் அவர்
வலியுறுத்தினார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப்
இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் வேட்பாளர் ஜோஹாரி அரிபினுக்கும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் அபிடின் இஸ்மாயிலுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.


Pengarang :