NATIONAL

தொழிலாளர் திறனை  மேம்படுத்த மனிதவள அமைச்சு வெ.260 கோடி ஒதுக்கீடு

கோலாலம்பூர், ஜூன் 30 – இந்நாட்டிலுள்ள சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் திறன்களையும் மேம்படுத்த மனிதவள அமைச்சு 260 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

இந்த நிதி புதிய மானியத்தை உள்ளடக்கவில்லை. மாறாக, அமைச்சு சார்ந்த  ஒன்பது துறைகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இந்த நிதி  திரட்டப்பட்டது என்று அவர் சொன்னார்.

மலேசியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவப்பட்ட உயர் தொழில்நுட்பத் தொழில்களின் சூழலுக்கேற்ப  உலகத் தரம் வாய்ந்த உள்ளூர் திறன் பயிற்சித் துறையை உருவாக்குவது சாத்தியமற்றது அல்ல என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள புக்கிட் ஜாலில்  தேசிய அரங்கில்  நடைபெற்ற 2024 தேசிய பயிற்சி வாரத்தின் (என்.டி.டபள்யு.) நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

இந்நிகழ்வுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.

மலேசியா மடாணி கோட்பாட்டிற்கேற்ப   திறன்களை மேம்படுத்துவதற்கும் அனைத்துலக அளவில் மறு பயிற்சி பெறுவதற்கும் அமைச்சு உறுதிபூண்டுள்ளதாகச் சிம் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில்  35 விழுக்காட்டு  திறன்வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் இலக்கை அடைய இந்த திறன் மேம்பாட்டுத் திட்டம் உதவும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அமைச்சின் ஆதரவுடன் மனிதவள மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இந்த தேசிய பயிற்சி வாரம் நிகழ்வு  ஜூன் 24 முதல் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்தது. இதன் இறுதி நிகழ்வு  புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நேற்று  முடிவடைந்தது.


Pengarang :