NATIONAL

பெண்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க சிறப்பு இட ஒதுக்கீடு

கோலா சிலாங்கூர், ஜூலை 1 : பெண்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க உதவும் முயற்சியில் அவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசு உத்தேசித்துள்ளது.

பெண்களின் வீட்டு உரிமை தொடர்பான கணக்கெடுப்பு செயல்படுத்தப்பட்ட பிறகு, இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என பெண்கள் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.

சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியம் (LPHS), யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியா (UUM) மற்றும் வனிதா பெர்டாயா சிலாங்கூர் (WBS) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

“இது (சிறப்பு ஒதுக்கீட்டு முன்மொழிவு) மாநில கூட்டத்தொடரில், குறிப்பாக ஒற்றை தாய்மார்கள், ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கான வீட்டு உரிமைக்கான சிறப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக முன்மொழியப்பட்டது.

“ரூமா சிலாங்கூர் கூ போன்ற மலிவு விலை வீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வீட்டுக் கொள்கையில் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பெண்களின் சொத்துரிமை தொடர்பான தரவு இதற்கு முன் இருந்ததில்லை என்றும், சம்பந்தப்பட்ட குழுவிற்கான வீட்டு உரிமைக் கொள்கையுடன் கணக்கெடுப்பு முடிவுகள் பின்பற்றப்படும் என்றும் அன்பால் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு சிலாங்கூரில் உள்ள மூன்று மண்டலங்களை உள்ளடக்கிய 1,000 நபர்களிடம் நடத்தப்பட்டது மற்றும் ஜூலை இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறினார்.


Pengarang :