NATIONAL

போலீஸ் ரோந்துக் கார் விபத்தில் சிக்கியது- இரு போலீஸ்கார்கள் காயம்

ஷா ஆலம், ஜூலை 1- காவல் துறையின் ரோந்துக் கார் ஒன்று மற்றொரு
வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு
போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் பெர்சியாரான் கயாங்கான்-
பெர்சியாரான் பெஸ்தாரி சாலை சமிக்ஞை விளக்கில் கடந்த சனிக்கிழமை
நிகழ்ந்தது.

கைகலப்பு தொடர்பான அவரச அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து
அவ்விரு போலீஸ்காரர்களும் செக்சன் 7, வர்த்தக மையம் நோக்கி
விரைந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஷா ஆலம்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

இந்த விபத்தின் காரணமாக கை மற்றும் முகத்தில் காயமும் தலையில்
வீக்கமும் அடைந்த அவ்விரு போலீஸ்காரர்களும் சிகிச்சைக்காக ஷா
ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர்
தெரிவித்தார்.

இவ்விபத்தில் சிக்கிய மற்றொரு காரான ஹோண்ட சிட்டியின்
ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என அவர் இன்று இங்கு வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த விபத்து நிகழ்ந்த போது சைரன் ஒலியை எழுப்பிய நிலையில்
எச்சரிக்கை சூழல் விளக்கை எரியவிட்டவாறு அந்த போலீஸ் ரோந்துக்
கார் சாலைச் சந்திப்பைக் கடந்த வேளையில் பச்சை நிற சமிக்ஞை
விளக்கு எரிந்து கொண்டிருந்த நேர்த்தடத்தில் அந்த ஹோண்டா சிட்டி கார்
பயணித்துக் கொண்டிருந்தது என்று அவர் சொன்னார்.

இந்த விபத்தில் இரு கார்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகக் கூறிய அவர்,
இவ்விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 43(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்றார்.

சாலை சமிக்ஞை விளக்கில் போலீஸ் கார் ஒன்றை பொது மக்களின் கார்
மோதுவதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப்
பகிரப்பட்டது.


Pengarang :