NATIONAL

தாமான் கின்றாரா செக்சன் 2 வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண வெ.250,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 1- தாமான் கின்ராரா, செக்சன் 2 பகுதி மக்கள் நீண்ட
காலமாக எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண சுபாங்
ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) 250,000 வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளது.

அந்த குடியிருப்பை வெள்ளம் அபாயம் உள்ள பகுதியாக எம்.பி.எஸ்.ஜே.
அடையாளம் கண்டதைத் தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக்
கின்றாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த இந்த திட்டம் 185 மீட்டர் நீளம் மற்றும் 1.2 மீட்டர் உயரத்திற்கு புதிய
வெள்ளத் தடுப்புச் சுவரை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
என்று அவர் சொன்னார்.

இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முற்றுப்
பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நேற்றிரவு தனது பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்டுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டார்.

இந்த வெள்ளத் தடுப்புச் சுவர் திட்டம் அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக
எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வினை ஏற்படுத்தும் எனத்
தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

குடியிருப்புப் பகுதிக்கு அருகில் கிள்ளான் ஆற்றுடன் இணைக்கக் கூடிய
வடிகால் நெடுக இந்த தடுப்புச் சுவர் அமைக்கப்படும். கிள்ளான் ஆற்றுக்கு
மிக அருகில் உள்ள காரணத்தால் தாமான் கின்ராரா 1 மற்றும் தாமான்
கின்ரார 2 ஆகிய குடியிருப்புப் பகுதிகள் அடிக்கடி வெள்ளப் பிரச்சனையை
எதிர்நோக்கி வருகின்றன.

தாமான் கின்ராரா, செக்சன் 2 பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக
எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனை தொடர்பில் இங் ஸீ ஹான்
கடந்த 2014ஆம் ஆண்டு முதலே மாநில சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வநதுள்ளதை சட்டமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள குறிப்புகள் காட்டுகின்றன.


Pengarang :