NATIONAL

நாட்டின் கௌரவத்தை உயர்த்த உதவுவீர்- இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

புத்ராஜெயா, ஜூலை 2- தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்குரிய
வாய்ப்புகளை மலேசியா கொண்டுள்ள வேளையில் நாட்டின் கௌரவத்தை
உயர்த்தும் முயற்சிகளுக்கு இளைஞர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசியா மீது தாம் உயர்ந்த லட்சியங்களையும் நம்பிக்கையையும்
கொண்டுள்ளதாகக் கூறிய அவர், நாட்டிற்காக தொடர்ந்து பாடுபட தாம்
விரும்புவதாகவும் சொன்னார்.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் அடுத்த தலைமுறையினரின்
எதிர்காலம் உத்தரவாதம் உள்ளதாக இருப்பதை உறுதி செய்யவும் நாட்டின்
கௌரவத்தை உயர்த்தவும் நான் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன்.
நாட்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்வதற்காக ஏதாவது
செய்யும்படி ‘முதியவர்‘ என்ற முறையில் உங்களை நான் கேட்டுக்கொள்ள
மட்டுமே முடியும். அதைத் தவிர வேறென்றுமில்லை என்று அவர்
தெரிவித்தார்.

மக்கள் தமக்கு வழங்கிய நம்பிக்கையைக் கொண்டு தனது கடமைகளைச்
செவ்வனே நிறைவேற்ற தாம் நோக்கம் கொண்டுள்ளதாக இன்று
நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான சில
அடித்தளமான காரியங்கள் செய்யப்பட்டு விட்டதாகக் கூறிய அவர்,
திருட்டு, வீண் விரயம் மற்றும் ஊழல் ஆகிய செயல்களால் நாடு
பாதிக்கப்படுவதை தடுப்பதும் அதில் அடங்கும் என்றார்.

இதன் காரணமாகவே நான் ஊழலுக்கு எதிராக கடுமையான
நிலைப்பாட்டைக் கொண்டுள்ளேன். குத்தகை மற்றும் டெண்டர்
விவகாரங்களில் அரசாங்கத் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் தலையிட முடியாது. நமக்கு பழக்கமானாக இருக்கும் நேரடி பேரம் மூலம்
குத்தகை வழங்குவதும் இனி நடக்காது என்றார் அவர்.

நான் ஏற்கனவே கூறியது போல் ஊழல் நாட்டில் பெருந்தொற்றாக மாறி
வருகிறது. ஊழலை ஒழிப்பதில் வழக்கமான நடவடிக்கைகளோடு
உறுதியான நிலைப்பாடும் அவசியமாகிறது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :