NATIONAL

பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஹமாஸுடன் பேச்சு நடத்த குழுவை அனுப்புகிறது இஸ்ரேல்

ஜெருசலம், ஜூலை 5 – தடைபட்டுப் போயிருக்கும் பிணைக்கைதிகளை
விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர பேராளர்
குழுவை தாம் அனுப்பவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம்
இஸ்ரேலியப் பிரதமர் நெதான்யாஹூ நேற்று தெரிவித்தார்.

ஒப்பந்தம் தொடர்பான ஷரத்துகளில் திருத்தப் பரிந்துரைகளைச் செய்ய
ஹமாஸ் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில்
இணக்கம் காணப்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய
அரசின் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ள பெயர்க் குறிப்பிட
விரும்பாத வட்டாரம் கூறியது.

ஹமாஸ் முன்வைத்த பரிந்துரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை
உள்ளடக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்று அந்த வட்டாரம்
தெரிவித்தது.

ஹமாஸின் இந்த பரிந்துரைக்கு இஸ்ரேல் மத்தியஸ்தர்கள் மூலம்
பதிலளித்துள்ளது. இது முந்தைய நிகழ்வுகளைக் காட்டிலும் முற்றிலும்
மாறுபட்டதாக உள்ளது. போர் நிகழ்ந்து வரும் இந்த ஒன்பது மாதக்
காலத்தில் ஹமாஸ் இயக்கம் தனது பரிந்துரையில் இணைத்துள்ள
நிபந்னைகள் ஏற்றுக்கொள்வதற்குரியவை அல்ல எனக் கூறி இஸ்ரேல்
தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேலிய பேராளர் குழுவுக்கு மோசாட்
உளவுப் பிரிவின் தலைவர் தலைமையேற்பார் என அந்நாட்டு அதிகாரி
ஒருவர் கூறினார்.

பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பேராளர் குழுவினருடன் நேற்று
பின்னேரம் சந்திப்பு நடத்திய நெதான்யாஹூ, பின்னர் பிணைக்கைதிகளை
விடுவிப்பது தொடர்பில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பேச்சு
நடத்தினார்.


Pengarang :