NATIONAL

மனநல பிரச்சனைகளைச் சமாளிக்க ஒன்பது மாவட்டங்களில் ஆலோசகர்கள் நியமனம்

ஷா ஆலம், ஜூலை 5: மனநலப் பிரச்சனைகளைச் சமாளிக்க ஒன்பது மாவட்டங்களில் ஆலோசகர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் மாநில அரசு நியமிக்கும்.

இது மலேசிய சர்வதேச ஆலோசகர்கள் சங்கத்துடன் (பெர்கமாவுடன்) இணைந்து மாநில அரசாங்கத்தின் முன்னோடித் திட்டம் என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

“இது மாநில அரசின் முன்னோடித் திட்டமாகும். இத்திட்டம் பெர்கமாவுடன் இணைந்து ஆலோசகர் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. அதுமட்டுமில்லாமல், இத்திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்பது ஆலோசகர்களை பணியமர்த்துவதை இலக்காகக் கொண்டு இந்த ஆண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

“ஒன்பது மாவட்டங்களை முன்னோடி திட்ட தளமாக நாங்கள் தேர்வு செய்துள்ளோம். ஏனெனில், நாங்கள் நிதி ஒதுக்கீட்டின் கோணத்தையும் கருத்தில் கொண்டோம். செயல்படுத்தப்பட்ட பிறகு, அடுத்த நடவடிக்கைக்கு இந்தத் திட்டத்தின் முடிவை பரிசீலித்து பார்ப்போம்,” என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையில், ஜூன் 30 வரை சிலாங்கூர் மனநலம் (செஹாட்) திட்டத்தின் கீழ் 1,354 நபர்கள் சிறப்பு அழைப்பு தளத்தை தொடர்பு கொண்டதாக ஜமாலியா விளக்கினார்.

“இதுவரை, மொத்தம் 281 நோயாளிகள் மனநல சிகிச்சை மானியங்களைப் பெற்றுள்ளனர். இது நிபுணர்களின் ஆலோசனைகள் உள்பட ஒரு அமர்வுக்கு RM200 என மதிப்பிடப்பட்ட சிகிச்சை செலவை உள்ளடக்கியது.

“கலந்துரையாடலின் அடிப்படையில், மனநலப் பிரச்சனைகளுக்கு வாழ்க்கை அழுத்தம், வேலை, குடும்ப சூழ்நிலை மற்றும் குடும்ப வன்முறை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பிலிருந்து அதிகரித்து வரும் மன நலப் பிரச்சனைகளை சமாளிக்க மாநில அரசு 500,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் செஹாட்டை (SEHAT) அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டம் பயனர்கள் மன ஆரோக்கியத்தின் அளவைத் தாங்களாகவே ‘ஸ்ட்ரெஸ் ஸ்கேல்’ மற்றும் ‘ரிஸ்க் செக்’ ஆகியவற்றின் மூலம் ஆரம்பப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.


Pengarang :