ANTARABANGSA

இந்தோனேசியாவின் தீவிரவாத அமைப்பான ஜெமா இஸ்லாமியா கலைக்கப்படுகிறது

ஜகார்த்தா, ஜூலை 5 – அல்-கய்டாவுடன்  தொடர்பில் இருந்த  பழைமைவாத  தீவிரவாத வலையமைப்பான ஜெமா இஸ்லாமியா (ஜே.ஐ.) கலைக்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கு ஜாவாவில் உள்ள போகோரில் பதிவு செய்யப்பட்டு பரவலாகப் பகிரப்பட்ட  3.10 வினாடிகள்  கொண்ட  காணொளி  மூலம்  அந்த அமைப்பை கலைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த அமைப்பின்  15 முக்கிய தலைவர்கள் சூழ்ந்திருக்க ஜே.ஐ.  கலைப்பு  தொடர்பான அறிவிப்பை  அதன்  முக்கிய  செய்தித் தொடர்பாளர் அபு ருஸ்தான் வாசிக்கும்  காட்சி அந்த காணொளியில்  இடம்பெற்றிருந்தது.

இந்தக் காணொளி கடந்த ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மையை ஜகார்த்தாவைத் தளமாகக் கொண்ட நெருக்கடி மீதான கொள்கை பகுப்பாய்வுக்  கழகத்தின் கல்விமான்களும்  இந்தோனேசியாவில் உள்ள பல பயங்கரவாத நிபுணர்களும் உறுதிப்படுத்தினர்.

இந்த முடிவை ஜே.ஐ. அமைப்பின்  தலைமைக் குழுவின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய உறைவிடப் பள்ளிகளின் தலைவர்கள் (பெசான்ட்ரேன்) ஆகியோரும் ஏற்றுக் கொண்டதாக அபு ருஸ்தான் அந்தக் காணொளியில்  கூறினார்.

அஹ்லுஸ் சுன்னா  வால் ஜமா கொள்கைகள், தேசிய சட்டங்கள் மற்றும் சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ப தீவிரவாத சித்தாந்தங்களை அகற்றுவதற்காக பெசான்ட்ரேன் கல்வி பாடத்திட்டங்களை திருத்தும் திட்டத்தையும் ஜே.ஐ. அறிவித்தது.

இந்தோனேசியாவின் முன்னேற்றத்திற்கும் கண்ணியத்திற்கும் பங்களிக்க தாங்கள் தயாராக உள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது

இந்தோனேசிய தேசிய காவல்துறை தலைமையகத்தின் டென்சஸ் 88 பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுடனான ஒப்பந்தம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று அபு ருஸ்தான் கூறினார்.

கடந்த 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தென் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, புருணை  மற்றும் தென் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய “இஸ்லாமிய அரசை” நிறுவுவதற்கான திட்டத்துடன்  ஜெமா இஸ்லாமியா அமைப்பு நிறுவப்பட்டது.

கடந்த  2002 அக்டோபர் 12இல் பாலியில்  நிகழ்த்த பயங்கர வெடிகுண்டுத் தாக்குதல் அந்த அமைப்பின் கோர முகத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியது.

பல இரவு விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்  202 பேர் உயிரிழந்தனர். ஜே.ஐ. அமைப்பின்  போர்க்குணமிக்க செயல்பாடுகளையும் அதன் உலகளாவிய தொடர்புகளையும் இது அடிக்கோடிட்டுக் காட்டியது.


Pengarang :