NATIONAL

நாணய முதலீட்டுத் திட்ட மோசடியில் சிக்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் வெ.150,000 இழந்தார்

பத்து பஹாட், ஜூலை 10- சமூக ஊடகங்கள் வாயிலாக உறுப்பினர்களைச்
சேர்க்கும் போலி டிஜிட்டல் நாணய முதலீட்டு மோசடிக் கும்பலின் ஆசை
வார்த்தையில் மயங்கி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் 150,000 வெள்ளியை
இழந்தார்.

கடந்த மார்ச் 26ஆம் தேதி டெலிகிராம் செயலி வாயிலாக மூன்று
நிறுவனங்கள் வெளியிட்ட பல மடங்கு லாபம் தரும் முதலீட்டுத்
திட்டத்தினால் 56 வயதான அந்த பெண் கவரப்பட்டதாகப் பத்து பஹாட்
மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்
ஷாஹருள்அனுவார் முஷ்ஹாடாட் அப்துல்லா கூறினார்.

இந்த முதலீட்டுத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்பிய அந்த ஆசிரியர்
அடையாளம் தெரியாத நபரை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டதாக
அவர் சொன்னார்.

பின்னர், முதலீடு தொடர்பான அகப்பக்கத்தின் இணைப்பு அந்த
பெண்ணிடம் வழங்கப்பட்டதோடு அதில் தனிப்பட்ட விபரங்களை
உள்ளிடும் படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார் என ஷாருள் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 26 முதல் ஜூலை 6 வரையிலான காலக்கட்டத்தில் அந்த
ஆசிரியர் 34 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் 156,850
வெள்ளியை சேர்த்துள்ளார்.

தனது முதலீட்டுக் கணக்கில் லாபத் தொகை சேர்ந்தவுடன் அதனை மீட்க
அப்பெண் முயன்றுள்ளார். எனினும், பல்வேறு காரணங்களைக் கூறி அந்த
பண மீட்பை சந்தேகப் பேர்வழி தட்டிக் கழித்துள்ளார்.

அப்பெண் பணத்தை மீட்பதை தடுப்பதற்காக பல்வேறு காரணங்களை கூறி
வந்த அந்த நபர் இறுதியாக கூடுதல் தொகையை செலுத்தும்படி அவரை வலியுறுத்தியுள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் கூடுதல்
பணம் செலுத்த மறுத்து விட்டார் என ஷாருள் தெரிவித்த்ர்.

இந்த மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்
யோங் பெங் காவல் நிலையத்தில் புகார் செய்ததாகக் கூறிய அவர், இந்த
புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :