NATIONAL

மடாணி கிராமத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள்  மக்களவையில் இன்று விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூலை 11- மடாணி கிராமத் திட்டத்தை அமலாக்குவதற்கான பிரதான நோக்கம், அத்திட்டத்திற்கு கிராமங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை, அதன் மூலம்  குறிப்பாக கட்டமைப்பு, வசதிகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ரீதியாக கிடைக்கக் கூடிய அனுகூலம்  உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இன்று நடைபெறும் அமைச்சர்  கேள்வி பதில் அங்கத்தின் போது இக்கேள்விகளை பெக்கான் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷ் முகமது புஸி ஷ் அலி எழுப்புவார் என நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கேள்வி நேரத்தின் போது, சுழியம் புள்ளிகள் காரணமாக சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த மாணவர்களுக்கு முதல் தேர்வாக குறிப்பிட்ட உயர்கல்விக் கூடங்கள் அல்லது உறைவிடப் பள்ளிகளில் இடம் கிடைக்காத பிரச்சனைக்கு இன்னும் தீர்வு கிட்டாத நிலையில் உடல் ரீதியான நடவடிக்கைகள், விளையாட்டு, புறப்பாட மதிப்பிட்டுத் திட்டம் (பி.ஏ.ஜே.ஏஸ்.கே.) தொடர்பான விதிமுறைகள் அமைச்சுக்கு அப்பாற்பட்ட பள்ளிகளிடமிருந்து வேறுபடுமா என குவாந்தான் உறுப்பினர் வான் ரசாலி வான் நோர் கல்வியமைச்சரிடம் வினவுவார்.

இது போன்றப் பிரச்சனைகள் மீண்டும் எழாதிருப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வியெழுப்புவார்.

மைடிஜிட்டல் ஐ.டி.யில் பதிவு செய்துள்ள பயனாளிகள், அரசாங்கம் ஊழியர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்த மைடிஜிட்டல் ஐ.டி. பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்து  டிஜிட்டல் அமைச்சரிடம் பெந்தோங் உறுப்பினர் யோங் ஷியாபுரா ஓத்மான் வினவுவார்.

உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழிலியல் துறைகளில் திறன் பெற்ற ஆள்பலத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் உள்ள தொழிலியல் பயிற்சிக் கழகங்களுக்கு ஆக்கத்திறனளிக்க வரையப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பண்டார் கூச்சிங் உறுப்பினர்  டாக்டர் கெல்வின் யீ மனித வள அமைச்சரிடம் வினா தொடுப்பார்.


Pengarang :