NATIONAL

ஃபைசால் மீதான தாக்குதல்-குற்றவாளிகளைப் பிடிக்கக் கோரி காவல் துறைக்கு மாநில சட்டமன்றம் கடிதம்

ஷா ஆலம், ஜூலை 12- கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால் ஹலிம்
மீது எரிதிராவகத் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி
காவல் துறைக்கு சிலாங்கூர் மாநில சட்டமன்ற அலுவலகம் கடிதம்
அனுப்பும்.

விளையாட்டாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர மற்றும் வன்முறைத்
தாக்குதல்களை கண்டிக்கும் அவசரத் தீர்மானத்தை சட்டமன்ற கடந்த
ஜூலை 5ஆம் தேதி நிறைவேற்றியது.

ஃபைசாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில்ஸ்ரீ செர்டாங் உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி கொண்டு வந்த அந்த அவசரத் தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தி அதனை ஏகமனதாக நிறைவேற்றினர்.

ஃபைசால் சம்பந்தப்பட்ட தீர்மானத்தை மாநில சட்டமன்றம்
நிறைவேற்றியது தொடர்பில் காவல் துறைக்கு சட்டமன்ற அலுவலகம்
கடிதம் அனுப்பவுள்ளதோடு இவ்விவகாரம் மீது விரிவாகவும்
விரைவாகவும் விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தும் என்று மாநில
சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் கூறினார்.

துணைச் சபாநாயகர் கம்ரி கமாருடின் முன்னிலையில் நடைபெற் இந்த
அவசரத் தீர்மானம் மீதான விவாதத்தில் ஐந்து உறுப்பினர்கள் கலந்து
கொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

கடந்த மே மாதம் 5ஆம் தேதி கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடி
ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் ஃபைசால் எரிதிராவகத்
தாக்குதலுக்கு ஆளானார்.

எரிதிராவகத் தாக்குதலின் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள ஃபைசால் ஜூலை
4ஆம் தேதி முதல் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகச் சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் தலைமைச் செயல்முறை அதிகாரி ஜோஹான் கமால் ஹமிடோன் கூறினார்.


Pengarang :