NATIONAL

டீசல் இலக்கு மானியம் அமல்படுத்தப்பட்டது முதல் வெ.25 கோடி எரிபொருள் கசிவு தடுக்கப்பட்டது

தும்பட், ஜூலை 15 –  கடந்த ஜூன் 10ஆம்  தேதி  டீசலுக்கான இலக்கு மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து தீபகற்ப மலேசியா எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 25 கோடி வெள்ளி  மதிப்புள்ள  டீசல் கசிவு கடத்தல் அல்லது முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

டீசல் விற்பனை  நாளொன்றுக்கு 23 விழுக்காடு அல்லது 65 லட்சம் லிட்டர் குறைந்துள்ள  வேளையில்  வணிக ரீதியிலான டீசல் விற்பனை தினசரி 48 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான் கூறினார்.

பெட்ரோல் நிலையங்களில் மானிய விலை லிட்டருக்கு வெ.2.15 ஆக இருந்தபோது தொழிற்சாலைகள் வணிக ரீதியில் டீசலை லிட்டருக்கு வெ.3.00 என்ற விலையில்  வாங்குவதற்குப் பதிலாக பெட்ரோல் நிலையங்களிலிருந்து மானிய டீசலைப் பெற முற்பட்டதாக அவர் விளக்கினார்.

பெங்கலான் குபோரில் உள்ள குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்திற்கு பணி நிமித்த வருகையை மேற்கொண்டப்  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது, பெட்ரோல் நிலையங்களில் டீசல் லிட்டருக்கு வெ.3.35 என விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் தொழில் துறையினர்  வணிக ரீதியில் டீசல் வாங்கத் தொடங்கிவிட்டனர்  என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வட எல்லைக்கு அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களும் டீசல் விற்பனையில் 40 முதல் 50 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு  ஏற்பட்ட  லாப குறைவு காரணமாக அண்டை நாடுகளுக்கான எரிபொருள்  கடத்தல் நடவடிக்கைகள் குறைவதை இது  குறிக்கிறது  என்று அவர் மேலும் கூறினார்.

டீசல் கசிவுக்கு எதிராக அரசு நிறுவனங்கள் கடுமையான அமலாக்கத்தைத் தொடரும் எனக் கூறிய அவர்,  டீசல் முறைகேடு மற்றும் கடத்தலைத் தடுப்பதில் அதிகாரிகளுக்கு உதவுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 400 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும். அதன் மூலம் நீண்ட கால அடிப்படையில்  நிதி நிலையை வலுப்படுத்த இயலும் என்றார் அவர்.


Pengarang :