NATIONAL

7,000 வெள்ளி கடனுக்காக நண்பர் படுகொலை- சந்தேக நபர்கள் மீது இன்று குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை 19- ஏழாயிரம் வெள்ளி கடன் தொகைக்காக தங்கள் நண்பரைக் கொன்றதாகக் கூறப்படும் மூன்று உள்ளூர் ஆடவர்கள் இன்று காஜாங் நீதிமன்ற வளாகத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.

கடந்த ஜூன் மாதம்  23ஆம் தேதி  செமனி அணைக்கு அருகிலுள்ள புதரில்  எரியூட்டப்பட்ட நிலையில் ஆடவர் ஒருவரின்  உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு  விசாரணை தொடங்கப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக இம்மாதம் 11ஆம் தேதி உலு லங்காட்,  14வது மைலில்  18 முதல் 44 வயதுடைய நான்கு ஆடவர்களை போலீசார் தடுத்து வைத்தனர்.

உயிரிழந்தவர் 28 வயது ஆண் என்பது மரபணு  பரிசோதனையின் மூலம்   அடையாளம் உறுதி செய்யப்பட்டது. மேலும் இறந்தவர் நான்கு சந்தேக நபர்களில் ஒருவரிடம் கடன் பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சிறுநீர்ப் பரிசோதனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.  மேலும் அவர்களில் இருவர் கடும் குற்றங்கள் தொடர்பான 20 க்கும் மேற்பட்ட முந்தைய பதிவுகளைக் கொண்டுள்ளனர் என்று  நஸ்ரோன்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மூன்று சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படும் என்றும் மற்றொரு சந்தேக நபர் அரசு தரப்பு சாட்சியாக இருப்பார் என்றும் அவர் கூறினார்.


Pengarang :