MEDIA STATEMENTNATIONAL

அரசாங்கம் பரம ஏழ்மையை ஒழிக்கும், மக்களின் சுபிட்சத்தைக் காக்கும்- பிரதமர் உறுதி

கோலாலம்பூர், ஜூலை 20- இந்நாட்டிலுள்ள மக்களின் சுபிட்சத்தை உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் தொடர்வதற்கான கூட்டரசு அரசாங்கத்தின் கடப்பாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தினார்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக கல்வி மற்றும் சுகாதாரத்தில் சீர்திருத்தம் செய்வது மற்றும் ஆங்கில மொழி ஆளுமையை மேம்படுத்துவது ஆகிய அணுகுமுறைகளை அரசாங்கம் தொடரும் என்று அவர் சொன்னார்.

புதிய துறைகளாக விளங்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), இலக்கவியல் உருமாற்றம் மற்றும் எரிசக்தி மாற்றம் துறைகளில் ஆற்றலைப் பெருக்கும் நடவடிக்கைகள் தொடரப்படும் என அவர் தெரிவித்தார்.

சீர்திருத்தம் மற்றும் உருமாற்றத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உயரிய மதிப்புக் கூறுகள், நற்பண்புகள், இன உணர்வு ஆகிய அம்சங்களை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்பதோடு கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாடை நேசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், அரசாங்கத்தின் அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பரம ஏழ்மைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சி இம்மாத இறுதிக்குள் நனவாகும் எனக் கூறிய அவர், அதனைத் தொடர்ந்து மக்களின் வீட்டுடமை மற்றும் வாழ்க்கைச் செலவின பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைளை அரசாங்கம் தொடரும் என்றார்.

இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற 17 மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் அரியணை அமரும் விழாவில் வாழ்த்து மற்றும் விசுவாச உரையை ஆற்றிய போது பிரதமர் இவ்வாறு கூறினார்.


Pengarang :