MEDIA STATEMENT

துர்நாற்றம் மற்றும் நுரையுடன் காணப்படும் உணவுகளைத் தவிர்ப்பீர்-   உணவு நிபுணர் ஆலோசனை

ஷா ஆலம், ஜூலை 20- நச்சுணவால் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க  பரிமாறப்படும் உணவின் மணம் மற்றும் அதன் தோற்றத்தை நன்கு  ஆராய்வது அவசியம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அந்த உணவு நுரை தள்ளி புளித்த வாடையுடன் காணப்பட்டால் அது   கெட்டுப் போனதற்கான அறிகுறியாகும். ஆகவே அந்த உணவைத் தவிர்க்க  வேண்டும் என்று மாநில பொது சுகாதார ஆலோசனைக் குழுவின்   உறுப்பினர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

ஆகவேதான் நாம் உணவை சரியான முறையில் தயாரிக்க வேண்டும்   என்று சுகாதார அமைச்சு பரிந்துரைக்கிறது. உணவுப் பொருட்களை   சுத்தப்படுத்தி சரியான பதத்தில் சமைக்க வேண்டும். அதே சமயம்  சமைத்த உணவை அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது என்று அவர்  சொன்னார்.  சாப்பிடுவதற்கு முன்னர் அந்த உணவை நன்கு சோதிக்க வேண்டும்.  துர்நாற்றமும் புளித்த வாடையும் வீசினால் அதனை உட்கொள்ளாதீர்கள்  என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

உணவை வழங்குவோர் மற்றும் பெறப்படும் உணவு மூலப் பொருள்  குறித்து பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த  உணவுப் பொருள்கள் முறையான இடத்திலிருந்து பெறப் பட்டதா என்பதை  உறுதி செய்ய வேண்டும்.  ஆரோக்கியமற்ற மற்றும் மாசடைந்த உணவை நாம் உட்கொள்ளலாமலிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நச்சுணவு உட்கொண்ட காரணத்தால் பினாங்கு, துங்கு அப்துல் ரஹ்மான்  புத்ரா தொழில்திறன் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்கள்  கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர் என்பது   குறிப்பிடத்தக்கது.

அந்த பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில் சமைக்கப்பட்ட தண்டூரி சிக்கன்   உணவை உட்கெண்டதால் அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டதாக    கூறப்படுகிறது.


Pengarang :