MEDIA STATEMENT

மூவர் கொண்ட கும்பல் தாக்கியதில் மாணவருக்கு தலையில் காயம்- ரவுப்பில் சம்பவம்

குவாந்தான், ஜூலை 22- பதினம வயது இளைஞரை தாக்கி காயப்படுத்தியது தொடர்பில் மூன்று பள்ளி மாணவர்களை போலீசார் ரவூப் வட்டாரத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இத்தாக்குதலில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி 40 தையல்கள் போடப்பட்ட அந்த 14 வயது மாணவர் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் காலை 11.18 மணியளவில் போலீசில் புகார் செய்ததாக ரவுப் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் முகமது ஷாரில் அப்துல் ரஹ்மான் கூறினார்.

ரவூப், தாமான் செம்பாலிட் அமானில் இரவு 10.15 மணி அளவில் தனக்கு அறிமுகமான மூன்று மாணவர்கள் தம்மை கடுமையாகத் தாக்கியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார் என்று அவர் பெர்மானாவிடம் தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட மாணவரின் தம்பியால் தவறுதலாகச் சேதப்படுத்தப்பட்ட கைப்பேசிக்கு பதிலாக புதிய கைபேசியை மாற்றி தராததால் அதிருப்தியடைந்த 16 முதல் 17 வயது வரையிலான அந்த மூவரும் இத் தாக்குதலை நடத்தியது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் மேலும் சொன்னார்.

அம்மூவரும் சம்பந்தப்பட்ட மாணவரை கைகளால் தாக்கியதாவும் அப்போது அவர் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்ததாகவும் கூறிய முகமது ஷாரில், விசாரணைக்கு உதவ சம்பவத்தை நேரில் கண்டவர்களின் உதவியை தாங்கள் நாடி உள்ளதாகவும் தெரிவித்தார்.

வேண்டுமென்ற கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 325வது பிரிவின் கீழ் அம்மூவரும் இரு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :