மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில்  ஆர்எஸ்-1 திட்டம் உதவும்

கோலாலம்பூர், ஜூலை 26-  முதலாவது  சிலாங்கூர் திட்டம் (ஆர்எஸ்-1) எதிர்காலத்தில்   மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) விகிதாசாரத்தை 0.5 விழுக்காடாக உயர்த்தும்.

இந்த  ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் சிலாங்கூர் கடந்தாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  25.9 விழுக்காட்டைப் பதிவு செய்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்த எண்ணிக்கை  முந்தைய ஆண்டை விட 0.4 விழுக்காடு அதிகமாகும். இந்த ஆர்எஸ்-1 திட்டம்  மலேசியத் திட்டத்திலிருந்து வேறுபட்டது. சிலாங்கூர் திட்டம் மிகவும் முழுமையானது. ஏனெனில் இது மாநில, மத்திய மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பை உள்ளடக்கியது.  திட்டங்கள், முன்னெடுப்புகளை  அறிய நாங்கள் அனைத்துத் துறைகள் மற்றும் நிறுவனங்களை  அழைக்கிறோம். ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப் பார்த்து  ‘ப்ளூ பிரிண்ட்’ எனப்படும் பெருந்திட்டத்தைச் சரி  பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

முதலாவது  சிலாங்கூர் திட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். முன்பு இது 0.2 முதல் 0.3 சதவிகிதம் வரை மட்டுமே பொருளாதாரம்  உயர்ந்ததைக் கண்டோம். ஆனால் ஆர்.எஸ்.-1  தொடங்கப்பட்டப் பின்னர் அது கிட்டத்தட்ட 0.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது என அவர்
சொன்னார்.

ஆர்எஸ்-1 மிகவும் ஆழமாக  திட்டமிடுகிறது. மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவுடன் அடுத்த சில ஆண்டுகளுக்குள்  50, 000 கோடி வெள்ளி பங்களிப்பை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் அவர் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை (சிப்ஸ்)  முன்னிட்டு ஏற்பாடு  செய்யப்பட்ட சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வில்   குழு உறுப்பினராக பங்கேற்று உரையாற்றிய போது  அவர் இவ்வாறு கூறினார்.

இந்தத் திட்டம் பொருளாதார அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் சமூகக் கூறுகளையும் தொடுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :