MEDIA STATEMENTNATIONAL

ஜூலை வரை 13 லட்சம் மெட்ரிக் டன் மீன்களை உற்பத்தி செய்து மீன்வளத் துறை சாதனை

ஜெலெபு, ஜூலை 28-  மலேசிய மீன்வளத் துறை கடந்த  ஜனவரி முதல் இம்மாதம் வரை மொத்தம் 13 லட்சம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அத்துறை  நாட்டில் உணவுப் பாதுகாப்பு உத்தரவாதத்தை  உறுதி செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் மீன்வளர்ப்பு மற்றும் தரை சார்ந்த  மீன் வளர்ப்பு ஆகிய துணைத் துறைகளும் அடங்கும் என்று மீன்வளத்துறையின் (மேலாண்மை) துணைத் தலைமை இயக்குநர் வான் முகமது அஸ்னான் அப்துல்லா கூறினார்.

மேலும், கூடுதலாக 400,000 மெட்ரிக் டன் மீன் உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில்  கடந்த ஆண்டின் சாதனை அளவான  17.9 லட்சம் மெட்ரிக் டன் அளவை எட்ட முடியும். மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தற்போது 92 சதவீதத்தை எட்டியுள்ளது. மீன் வளர்ப்புத் துறையானது  கடலில் பிடிக்கப்படும்  மீன்கள் தவிர,  மீன் வளர்ப்பும்  அந்த கடல் உணவு  விநியோகம் அதிகரிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் என அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற தென்மண்டல நிலையிலான மைஅக்ரோப்ரினியர் பெரிக்கானான் (மைஏபி)  மற்றும் மைகம்யூனிட்டி (மைகேபி) நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வை விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறைக்கான  நெகிரி செம்பிலான் மாநில ஆடசிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தொடக்கி வைத்தார்.

வரும்  2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மீன்பிடி உற்பத்தியில் 40 சதவீதத்தை மீன்பிடித் துறையின் மூலம் பெறப்படுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை புரட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இதனை சாத்தியமாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :