ANTARABANGSAMEDIA STATEMENT

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா- ட்ரம்ப் இடையே இடைவெளி குறைகிறது- கருத்துக் கணிப்பில்  தகவல்

வாஷிங்டன், ஜூலை 28-   அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் இடையேயான போட்டி வியக்கத்தக்க  அளவிற்கு நெருக்கமாக உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் சஞ்சிகையின் புதிய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளையர் அல்லாத வாக்காளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் அவரது பிரச்சாரம் ஜனநாயகக் கட்சியினரிடையே கணிசமான அளவு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்  அந்த சஞ்சிகையை மேற்கோள் காட்டி ஷின் ஹூவா  செய்தி வெளியிட்டுள்ளது.

நேரடி மோதலில் டிரம்ப் குறுகிய வித்தியாசத்தில்  முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருக்கு 49 விழுக்காட்டு ஆதரவு கிடைத்துள்ள வேளையில் ஹாரிஸ் 47 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றுள்ளார்.

ஜோ பைடன்  போட்டியிலிருந்து விலகி கமலா  ஹாரிஸை ஆதரிப்பதற்கு முன் ட்ரம்ப்  ஜோ பைடனை விட ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்தார்.

இதனிடையே, ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் போன்ற பிற சுயேட்சை மற்றும் மூன்றாம் தரப்பு வேட்பாளர்களின் பெயர் வாக்குச் சீட்டில் சேர்க்கப்பட்டபோது கமலா ​​ஹாரிஸ் 45 விழுக்காட்டு ஆதரவையும், டிரம்ப் 44 விழுக்காட்டு ஆதரவையும் பெற்றனர்.

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, சட்டவிரோதக் குடியேற்றம், பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள் மற்றும் குற்றங்களை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்ப் அதிக திறன் கொண்டவராக கருதப்படுகிறார். இருப்பினும், கருக்கலைப்பைக் கையாள்வதில் ஹாரிஸ் 51 சதவிகிதம் முதல் 33 சதவிகிதம் வரை  கூடுதல் அனுகூலத்தைப் பெற்றுள்ளார்.


Pengarang :